உலககோப்பை கால்பந்து 2-வது அரைஇறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து-குரோஷியா அணிகள் இன்று பலப்பரீட்சை


உலககோப்பை கால்பந்து 2-வது அரைஇறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து-குரோஷியா அணிகள் இன்று பலப்பரீட்சை
x
தினத்தந்தி 10 July 2018 11:15 PM GMT (Updated: 10 July 2018 9:08 PM GMT)

உலக கோப்பை கால்பந்து தொடரின் 2-வது அரைஇறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து-குரோஷியா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

மாஸ்கோ,

ரஷியாவில் நடந்து வரும் 21-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. மாஸ்கோவில் உள்ள லுஸ்னிகி ஸ்டேடியத்தில் இன்றிரவு அரங்கேறும் 2-வது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்து அணி, குரோஷியாவை எதிர்கொள்கிறது.

ஆக்ரோஷமாக விளையாடக்கூடிய அணிகளில் ஒன்றான குரோஷியா லீக் சுற்றில் நைஜீரியா, அர்ஜென்டினா, ஐஸ்லாந்து ஆகிய அணிகளை நையபுடைத்து எடுத்தது. 2-வது சுற்றில் டென்மார்க்கையும், கால்இறுதியில் ரஷியாவையும் பெனால்டி ஷூட்- அவுட் முறையில் சாய்த்தது.

2-வது முறையாக அரைஇறுதிக்குள் (இதற்கு முன்பு 1998-ம் ஆண்டு) நுழைந்துள்ள குரோஷிய அணி முதல்முறையாக இறுதிசுற்றை எட்டும் வேட்கையில் வரிந்து கட்டுகிறது. அந்த அணிக்கு பிரதான பலமே நடுகளம் தான். கேப்டன் லூக்கா மோட்ரிச்சும், (2 கோல் அடித்துள்ளார்), இவான் ராகிடிச்சும் நடுகள பகுதியின் இரட்டை தூண்கள் ஆவர். உலகின் மிகச்சிறந்த நடுகள வீரர்களாக வர்ணிக்கப்படும் இவர்களிடம் இருந்து பந்தை தட்டிப்பறிப்பது எளிதல்ல. ரஷியாவுக்கு எதிரான கால்இறுதியில் மோட்ரிச்சின் கால்களை பந்து 139 முறை தொட்டு பார்த்தது. அதில் 102 முறை சக வீரர்களுக்கு பந்தை கடத்தி கொடுத்தது கவனிக்கத்தக்க விஷயமாகும்.

இவர்களை தவிர்த்து மரியோ மான்ட்ஜூகிச், டேஜன் லோவ்ரென் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். ஆனாலும் குரோஷிய அணி குறிப்பிட்ட வீரரை சார்ந்து இருந்ததில்லை. நடப்பு தொடரில் அந்த அணியில் இதுவரை 8 வீரர்கள் கோல் அடித்திருப்பது அதற்கு உதாரணமாகும். தசைப்பிடிப்பால் அவதிப்படும் கோல் கீப்பர் டேனிஜெல் சுபசிச் களம் காண்பதில் சந்தேகம் நிலவுகிறது.

28 ஆண்டுகளுக்கு பிறகு அரைஇறுதிக்கு தகுதி பெற்றிருக்கும் இங்கிலாந்து அணி லீக் சுற்றில் துனிசியா, பனாமா அணிகளை தோற்கடித்து பெல்ஜியத்திடம் தோல்வியை தழுவியது. அதன் பிறகு 2-வது சுற்றில் கொலம்பியாவை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் வென்ற இங்கிலாந்து அணி, கால்இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் சுவீடனை துரத்தியது.

1966-ம் ஆண்டு சாம்பியனான இங்கிலாந்து அணி 52 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்புடன் யுக்திகளை வகுத்துள்ளது.

இளம் வீரர்களை கொண்ட இங்கிலாந்து அணியில் கேப்டன் ஹாரி கேன் (6 கோல்), ஹாரி மேக்குயர், டெலி அலி, ஜோர்டான் ஹென்டர்சன், லிங்கார்ட் உள்ளிட்டோர் நம்பிக்கை வீரர்களாக மின்னுகிறார்கள். சுவீடனுக்கு எதிராக இங்கிலாந்து அணி கச்சிதமாக செயல்பட்டதால் இந்த ஆட்டத்தில் அணியில் மாற்றத்தை செய்ய பயிற்சியாளர் காரெத் சவுத்கேட் விரும்பவில்லை.

அந்த அணியினர் நேற்று வித்தியாசமாக, ரப்பரால் ஆன சிக்கன் போன்ற பொம்மைகளை பயன்படுத்தி பயிற்சியில் ஈடுபட்டனர். ஒருவருக்கொருவர் அதனை வேகமாக தூக்கி போட்டு பிடித்தும், சக வீரர்களிடம் இருந்து இந்த பொம்மை சிக்கனை பறிப்பது போன்றும் பயிற்சி மேற்கொண்டனர். இந்த மாதிரியான பயிற்சி இன்றைய ஆட்டத்தில் எந்த அளவுக்கு பலன் கொடுக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

குரோஷிய வீரர் டேஜன் லோவ்ரென் அளித்த ஒரு பேட்டியில் ‘இங்கிலாந்து கேப்டன் ஹாரிகேன் இதுவரை 6 கோல்கள் அடித்துள்ளார். அதற்கு அவர் தகுதியானவர். கடந்த சில சீசன்களில் அவர் 25 கோல்களுக்கு மேல் அடித்துள்ளார். உலகின் சிறந்த வீரர்களில் ஒருவர். அவரின் சவாலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். சிறந்த தடுப்பு ஆட்டக்காரர்களில் நானும் ஒருவன் என்பதை களத்தில் காட்டுவேன்’ என்றார்.

இவ்விரு அணிகளும் தகுதி சுற்று, நட்புறவு போட்டிகளில் மோதியுள்ளன. ஆனால் உலக கோப்பை போட்டியில் நேருக்கு நேர் மல்லுகட்டுவது இதுவே முதல் முறையாகும். சரிசம பலத்துடன் திகழும் இவ்விரு அணிகளில் ஆதிக்கம் செலுத்தப்போவது யார்? என்பதை யூகிப்பது கடினமாகும். ஆட்டம் இன்னொரு முறை பெனால்டி ஷூட்-அவுட்டுக்கு சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி டென்2, சோனி இ.எஸ்.பி.என். சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Next Story