கால்பந்து

உலக கோப்பை கால்பந்தில் மகுடம் சூடப்போவது யார்? + "||" + Who is the Winner in the World Cup football?

உலக கோப்பை கால்பந்தில் மகுடம் சூடப்போவது யார்?

உலக கோப்பை கால்பந்தில் மகுடம் சூடப்போவது யார்?
உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் பிரான்ஸ்-குரோஷியா இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளன.
மாஸ்கோ,

உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று இரவு 8.30 மணிக்கு அரங்கேறும் இறுதிப்போட்டியில் பிரான்ஸ்-குரோஷியா அணிகள் மோத உள்ளன.

21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 14-ந்தேதி ரஷியாவில் தொடங்கியது. 32 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் ஐரோப்பிய அணிகளான பிரான்சும், குரோஷியாவும் இறுதிப்போட்டியை எட்டின.


இந்த நிலையில் உலக கோப்பை மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் பிரான்சும், குரோஷியாவும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாஸ்கோ நகரில் அமைந்துள்ள லுஸ்னிகி ஸ்டேடியத்தில் யுத்தத்தில் இறங்குகின்றன. உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்களின் ஆவலை தூண்டி இருப்பதால் இந்த ஆட்டம் மாபெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.

1998-ம் ஆண்டு சாம்பியனான பிரான்ஸ் அணி 2-வது முறையாக வாகை சூடும் முனைப்பில் உள்ளது. தோல்வியே சந்திக்காத அந்த அணி அரைஇறுதியில் பெல்ஜியத்தை 1-0 என்ற கோல் கணக்கில் விரட்டியது. கிரிஸ்மான் (3 கோல்), ‘இளம் புயல்’ கைலியன் பாப்பே (3 கோல்), பால் போக்பா, ஆலிவர் ஜீருட், ரபெல் வரானே உள்ளிட்டோர் பிரான்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாக உள்ளனர். இவர்கள், களத்தில் இறங்கி விட்டால் புயல்போல் சுழன்று எதிரணியை உலுக்கி விடும் திறமை படைத்தவர்கள். இளமையும், அனுபவமும் கலந்த பிரான்சுக்கே இப்போது வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக நிபுணர்கள் சொல்கிறார்கள்.

அரைஇறுதியில் பெல்ஜியத்துக்கு எதிராக ஒரு கோல் அடித்த பிறகு ‘ரிஸ்க்’ எடுக்க விரும்பாத பிரான்ஸ் அணியினர், அதன் பிறகு முழுமையாக தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தினர். இது மந்தமான யுக்தி என்று விமர்சிக்கப்பட்டது. ஆனால் குரோஷிய வீரர்கள் தாக்குதல் தொடுப்பதில் கில்லாடிகள் என்பதால் பிரான்சும் தனது வியூகங்களை கொஞ்சம் மாற்றி அமைத்து இருக்கிறது. அந்த அணியின் பயிற்சியாளர் டெஸ்சாம்ப்ஸ் பின்களத்தை மேலும் வலுப்படுத்தி இருக்கிறார்.

இந்த உலக கோப்பையில் குரோஷிய அணி இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. லீக் சுற்றில் அர்ஜென்டினாவுக்கு அதிர்ச்சி அளித்ததும், அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்தை போட்டுத்தாக்கியதும் குரோஷியாவின் எழுச்சியை பறைசாற்றுகிறது. மூன்று ‘நாக்-அவுட்’ சுற்று ஆட்டங்களிலும் பின்தங்கிய நிலையில் இருந்து சளைக்காமல் போராடி வெற்றிப்பாதைக்கு திரும்பிய குரோஷிய வீரர்கள் மனவலிமை மிக்கவர்கள் என்பதில் சந்தேகமில்லை.

தங்கப்பந்து விருது வெல்லும் வாய்ப்பில் உள்ள கேப்டன் லூக்கா மோட்ரிச்சும், இவான் ராகிடிச்சும் உலகின் தலைச்சிறந்த நடுகள வீரர்களாக வர்ணிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு இவான் பெரிசிச், மரியோ மான்ட்ஜூகிச், வர்சல்ஜ்கோ ஆகியோர் பக்கபலமாக இருக்கிறார்கள். முதல்முறையாக இறுதி சுற்றை அடைந்துள்ள குரோஷியா, உலக கோப்பையை வசப்படுத்தி புதிய சரித்திரம் படைக்கும் உத்வேகத்துடன் வரிந்து கட்டி நிற்கும்.

இந்த போட்டியை பொறுத்தவரை இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் விளங்குவதால் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பதை கணிப்பது கடினம். ஆனால் முதல் கோல் போடும் அணியின் கை எளிதில் ஓங்கிவிடும். இவ்விரு அணிகளும் உலக கோப்பையில் இதற்கு முன்பு 1998-ம் ஆண்டு அரைஇறுதியில் சந்தித்து இருந்தது. இதில் பிரான்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி இருந்தது. அதற்கு வட்டியும் முதலுமாக பழிதீர்க்க குரோஷிய வீரர்கள் தங்களது முழு ஆற்றலையும் களத்தில் கொட்டுவதற்கு ஆயத்தமாக உள்ளனர்.

கடைசியாக நடந்த மூன்று உலக கோப்பை இறுதி ஆட்டங்களும் கூடுதல் நேரத்திற்கு சென்று இருக்கிறது. அந்த வகையில் இந்த ஆட்டம் கூடுதல் நேரத்திற்கோ அல்லது பெனால்டி ஷூட்-அவுட்டுக்கோ சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏனெனில் குரோஷியா ஏற்கனவே 2-வது சுற்று மற்றும் கால்இறுதியில் பெனால்டி ஷூட்-அவுட் அனுபவத்தை சந்தித்து இருக்கிறது.

இதில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு ரூ.255 கோடியும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.188 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.

இறுதிப்போட்டியில் களம் காணும் உத்தேச அணி பட்டியல் வருமாறு:-

பிரான்ஸ்: ஹூகோ லோரிஸ் (கோல் கீப்பர்), பெஞ்சமின் பவார்ட், ரபெல் வரானே, சாமுல் உம்டிடி, லுகாஸ் ஹெர்னாண்டஸ், பால் போக்பா, நிகோலோ கன்ட், கைலியன் பாப்பே, கிரிஸ்மான், பிளைஸ் மடுடி, ஆலிவர் ஜீருட்.

குரோஷியா: டேனிஜெல் சுபசிச் (கோல் கீப்பர்), சிம் வர்சல்ஜ்கோ, டேஜன் லோவ்ரென், டோமாகோஜ் விடா, இவான் ஸ்டிரினிச், ராகிடிச், மார்சிலோ புரோஜோவிச், ஆன்ட் ரெபிச், லூக்கா மோட்ரிச், இவான் பெரிசிச், மான்ட்ஜூகிச்.

இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி இ.எஸ்.பி.என்., சோனி டென்2, டென்3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

“வீதிக்கு வந்து கொண்டாடுவோம்”

“கால்பந்து வரலாற்றில் குரோஷிய அணி ஒரு போதும் பிரான்சை வென்றதில்லையே என்று கேட்கிறீர்கள். சாதனைகளும், புள்ளி விவரங்களும் முறியடிக்கப்படக்கூடியது தான். அதனால் எதிராளி யார் என்பது பற்றி கவலையில்லை. குரோஷியாவின் ஆட்டத்தை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆவலுடன் உற்றுநோக்குவார்கள். அதனால் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே எங்களது நோக்கம். எங்களது வீரர்கள் சாம்பியன்ஸ் லீக்கில் இறுதிப்போட்டி உள்பட நிறைய ஆட்டங்களில் விளையாடி இருக்கிறார்கள். அவர்களது வாழ்க்கையில் இது மிகப்பெரிய ஆட்டமாகும். ஒரு சில வீரர்கள் சிறிய காயத்தால் அவதிப்படுகிறார்கள். அவர்கள் இறுதிப்போட்டிக்குள் உடல்தகுதியை எட்டி விடுவார்கள் என்று நம்புகிறேன். நாளைய தினம் (இன்று) 40 லட்சம் குரோஷிய மக்களும் வீதிக்கு வந்து வெற்றியை கொண்டாடும் வகையில் முடிவு அமையும் என்று நம்புகிறேன்” என குரோஷியா பயிற்சியாளர் ஜட்கோ டாலிச் தெரிவித்தார்.

“யூரோவில் செய்த தவறு மீண்டும் வராது”

“2016-ம் ஆண்டு ஐரோப்பிய சாம்பியன்ஷிப் (யூரோ) தொடரின் இறுதி ஆட்டத்தில் அதீத நம்பிக்கையால் போர்ச்சுகலுக்கு எதிராக தோற்று போனோம். அதாவது அரை இறுதியில் உலக சாம்பியன் ஜெர்மனியை வீழ்த்தியதுமே இறுதிப்போட்டியிலும் வென்று விட்டது போல் நினைத்து விட்டோம். அந்த தவறை நாங்கள் மீண்டும் செய்யமாட்டோம் என்று உறுதி அளிக்கிறேன். இந்த முறை உலக கோப்பையை வெல்வதற்கு எங்களால் முடிந்த எல்லாவற்றையும் களத்தில் செய்வோம். குரோஷிய அணி வீரர்கள் உலகத்தரம் வாய்ந்தவர்கள் என்பதை அறிவோம். தகுதி சுற்றில் கடினமான பிரிவில் இருந்து வந்தார்கள். நாளை (இன்று) ஒரே ஒரு அணி உலக கோப்பையை கையில் ஏந்தும். அது நாங்களாகவே இருப்போம்” என  பிரான்ஸ் வீரர் பால் போக்பா தெரிவித்தார்.

பிரான்ஸ் வென்றால்...

* உலக கோப்பையை இரண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட முறை கைப்பற்றிய 6-வது அணியாக இணையும்.

* ஒரு வீரராகவும், பயிற்சியாளராகவும் கோப்பையை வென்ற 3-வது நபர் என்ற பெருமையை டெஸ்சாம்ப்ஸ் பெறுவார்.

குரோஷியா வெற்றி பெற்றால்...

* உலக கோப்பையை உச்சிமுகர்ந்த அணிகளின் வரிசையில் 9-வது புதிய அணியாக இடம் பிடிக்கும்.

* குறைந்த தரவரிசையுடன் (20) பட்டம் வென்ற முதல் அணி என்ற சிறப்பை பெறும்.