கால்பந்து போட்டி: பிரான்ஸ் அணி உலக சாம்பியன்


கால்பந்து போட்டி: பிரான்ஸ் அணி உலக சாம்பியன்
x
தினத்தந்தி 16 July 2018 12:00 AM GMT (Updated: 15 July 2018 8:35 PM GMT)

உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை பந்தாடி 20 ஆண்டுகளுக்கு பிறகு மகுடம் சூடியது.

மாஸ்கோ,

21-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா கடந்த மாதம் 14-ந்தேதி ரஷியாவில் கோலாகலமாக தொடங்கியது. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி முதல் சுற்றை தாண்டவில்லை. 5 முறை சாம்பியனான பிரேசில் கால் இறுதியுடன் முடங்கியது. முன்னாள் சாம்பியன்கள் அர்ஜென்டினா, ஸ்பெயின் அணிகள் 2-வது சுற்றுடன் உதைப்பட்டு நடையை கட்டின.

ஐரோப்பிய அணிகளான முன்னாள் சாம்பியன் பிரான்சும், குரோஷியாவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இவ்விரு அணிகளில் உலக கிரீடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி மாஸ்கோ நகரில் உள்ள லுஸ்னிகி ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது.

முந்தைய ஆட்டங்களில் கருப்பு நீல நிற உடைகளுடன் விளையாடிய குரோஷியா, முக்கியமான இந்த ஆட்டத்தில் தங்களது தேசிய கொடிக்குரிய நிறமான சிவப்பு, வெள்ளை நிறம் கலந்த கட்டம் போட்ட பனியன் அணிந்து களம் இறங்கினர். இரு அணிகளிலும் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

ரசிகர்களின் ஆரவாரமான ஆர்ப்பரிப்புக்கு மத்தியில் இரு அணி வீரர்களும் ‘இறுதிஉதை’யை தொடங்கினர். பிரான்ஸ் வீரர்கள் கோல் வாங்கி விடக்கூடாது என்ற முனைப்பில் தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்த, குரோஷிய வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடினர். பந்தும் இவர்கள் வசமே அதிகமாக வலம் வந்தது.

18-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் கிரிஸ்மானை, குரோஷியாவின் புரோஜோவிச் லேசாக தள்ளிவிட்டார். இதற்கு நடுவர் பிரிகிக் வாய்ப்பு வழங்கினார்.

‘பிரிகிக்’ வாய்ப்பில் ஏறக்குறைய 25 மீட்டர் தூரத்தில் இருந்து பிரான்சின் நட்சத்திர வீரர் கிரிஸ்மான் இலக்கை நோக்கி தூக்கியடித்த பந்தை, குரோஷியாவின் மரியோ மான்ட்ஜூகிக் தலையால் முட்டி வெளியே தள்ள முயன்ற போது, துரதிர்ஷ்டவசமாக அது வலைக்குள் நுழைந்து சுயகோலாக மாறியது. இதனால் குரோஷிய அணியினர் ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். மறுமுனையில் பிரான்ஸ் வீரர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். ஆனால் பிரான்சின் முன்னிலை நீண்ட நேரம் நிலைக்கவில்லை.

28-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் நிகோலோ கன்ட் ‘பவுல்’ செய்து மஞ்சள் அட்டை எச்சரிக்கைக்கு உள்ளானதுடன் குரோஷியாவுக்கு ‘பிரிகிக்’ வாய்ப்பு கிட்டியது.

‘பிரிகிக்’ வாய்ப்பில் குரோஷியாவின் தந்திரம் வித்தியாசமாக அமைந் தது. அதாவது குரோஷிய கேப்டன் மோட்ரிச் பந்தை வலையை நோக்கி அடிக்காமல், கம்பத்திற்கு வலது பக்கம் நின்ற வர்சல்ஜ்கோ பக்கம் தூக்கியடித்தார். பிறகு அவரிடம் இருந்து பந்து சக வீரர்களின் துணையுடன் கோல்பகுதிக்குள் வர, அதை குரோஷியாவின் இவான் பெரிசிச் இடது காலால் உதைத்து அற்புதமாக கோலாக்கி பதிலடி கொடுத்தார். இதையடுத்து ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமனுக்கு வந்தது.

கடந்த சில உலக கோப்பை இறுதி ஆட்டங்களில் வழக்கமான நேரத்தில் கோல் விழுவதே அதிசயமாக இருந்த நிலையில், இந்த உலக கோப்பையில் தொடக்கத்திலேயே அடுத்தடுத்து இரு கோல் தரிசனம் பார்த்ததில் ரசிகர்கள் பரவசத்திற்கு உள்ளானர்கள்.

இதன் பிறகு இரு அணி வீரர்களும் தாக்குதல் பாணியை தீவிரப்படுத்தினர். 38-வது நிமிடத்தில் கார்னரில் இருந்து பிரான்ஸ் வீரர் அடித்த ஷாட்டை குரோஷியாவின் இவான் பெரிசிச் எதிர்பாராத விதமாக கையால் தடுத்து விட்டார். அவர் பந்தை கையால் கையாண்டதை பார்த்த பிரான்ஸ் வீரர்கள் ‘பெனால்டி’ கேட்டு நடுவரிடம் முறையிட்டனர்.

இதைத் தொடர்ந்து வீடியோ உதவி நடுவர் (வி.ஏ.ஆர்.) தொழில்நுட்பத்தின் உதவியை போட்டி நடுவர் நாடினார். இதன் முடிவில் பிரான்சுக்கு அவர் பெனால்டி வாய்ப்பு வழங்கினார். இந்த பொன்னான பெனால்டி வாய்ப்பை பிரான்சின் கிரிஸ்மான் எளிதில் கோலாக்கினார். கிரிஸ்மான் இதுவரை பெனால்டி வாய்ப்பை வீணாக்கியது கிடையாது. இந்த உலக கோப்பையில் அவர் அடித்த 4-வது கோல் இதுவாகும். இதையடுத்து முதல் பாதியில் பிரான்ஸ் அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

2-வது பாதியில் ஆட்டம் இன்னும் வேகம் பிடித்தது. பிரான்ஸ் வீரர்களின் அதிரடி தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் குரோஷிய வீரர்கள் திண்டாடினர். கோல் அடித்தாக வேண்டிய நெருக்கடியில் அவர்களின் தடுப்பு வியூகமும் பலவீனம் ஆனது. இதை சாதகமாக பயன்படுத்திய பிரான்ஸ் வீரர்கள் அடுத்தடுத்து கோல் மழை பொழிந்தனர்.

59-வது நிமிடத்தில் பால் போக்பாவும், 65-வது நிமிடத்தில் கைலியன் பாப்பேவும் கோல் அடித்து குரோஷியாவை முற்றிலும் நிலைகுலைய வைத்தனர்.

1-4 என்று பின்தங்கியதால் அதன் பிறகு குரோஷிய வீரர்களின் நம்பிக்கை தளர்ந்து போனது. 69-வது நிமிடத்தில் பிரான்ஸ் கோல் கீப்பரும், கேப்டனுமான ஹூகோ லோரிஸ் அற்பத்தனமான ஒரு தவறு செய்தார். தனது காலுக்கு வந்த பந்தை அவர் தவறுதலாக அருகில் நின்ற குரோஷியாவின் மான்ட்ஜூகிச் பக்கம் தட்டி விட, அதை அவர் கண்ணிமைக்கும் நேரத்தில் கோலாக்கினார். ஆனாலும் அது அவர்களுக்கு ஆறுதல் கோலாகவே அமைந்தது. அதன் பிறகு மேற்கொண்டு கோல் ஏதும் விழவில்லை.

பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதற்கு முன்பு 1998-ம் ஆண்டு பிரான்ஸ் அணி பட்டம் வென்று இருந்தது. தோல்வியே சந்திக்காமல் முதல்முறையாக இறுதி சுற்றுக்கு முன்னேறி இருந்த குரோஷியாவின் கனவு, பிரான்ஸ் வீரர்கள் மூலம் தகர்ந்து போனது.

சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணிக்கு ரூ.255 கோடியும், 2-வது இடம் பிடித்த குரோஷியாவுக்கு ரூ.188 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

அடுத்த உலக கோப்பை எங்கு?

22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி 2022-ம் ஆண்டு கத்தார் நாட்டில் நடக்கிறது. அரபு நாட்டில் முதல்முறையாக அரங்கேறும் இந்த உலக கோப்பை போட்டி வழக்கமான மே, ஜூன், ஜூலை மாதங்களில் இல்லாமல் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடத்தப்படுகிறது.

பரிசளிப்பு விழாவில் பொழிந்த மழை

இறுதிப்போட்டி முடிந்து, பரிசளிப்பு விழா நடந்த போது மழை கொட்டித் தீர்த்தது. இறுதிப்போட்டியை நேரில் கண்டுகளித்த ரஷிய அதிபர் புதின், பிரான்ஸ் அதிபர் இம்மானுல், குரோஷியா பெண் அதிபர் கோலின்டா கிராபர்-கிடாரோவிச் ஆகியோரும் மழையில் நனைந்தனர். பிரான்ஸ் வீரர்கள் மழையில் நனைந்தபடி கோப்பையை கையில் ஏந்தி கொண்டாடினர்.

இங்கிலாந்து கேப்டனுக்கு தங்க ஷூ, குரோஷிய கேப்டனுக்கு தங்கப்பந்து

* இந்த உலக கோப்பையில் அதிக கோல்கள் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்த இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேனுக்கு (6 கோல்) தங்க ஷூ விருது வழங்கப்பட்டது. இங்கிலாந்து வீரர் ஒருவர் தங்க ஷூ விருது பெறுவது கடந்த 32 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். பிரான்சின் கைலியன் பாப்பே, கிரிஸ்மான், பெல்ஜியத்தின் ரோம்லு லுகாகு, போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ரஷியாவின் செர்ஷிவ் ஆகியோர் தலா 4 கோல்களுடன் அடுத்த இடத்தில் உள்ளனர்.

* சிறந்த கோல் கீப்பருக்கான தங்க கையுறை (குளோவ்ஸ்) விருதை பெல்ஜியம் கோல் கீப்பர் கோர்ட்டோஸ் தட்டிச்சென்றார். இந்த உலக கோப்பையில் பெல்ஜியம் 6 வெற்றி, ஒரு தோல்வியுடன் 3-வது இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

* சர்ச்சைகளுக்கு இடமின்றி சரியான உத்வேகத்துடன் விளையாடியதற்கான விருது (பேர் பிளே) ஸ்பெயின் அணிக்கு கிடைத்தது.

* நடப்பு தொடரில் கலக்கிய இளம் வீரருக்கான விருதை 19 வயதான பிரான்சின் பாப்பே பெற்றார்.

* இந்த தொடரில் சிறப்பாக ஆடியதற்கான தங்கப்பந்து விருதை குரோஷிய கேப்டன் மோட்ரிச் பெற்றார்.

இறுதிப்போட்டியில் முதல் சுயகோல்

* 2002-ம் ஆண்டுக்கு பிறகு வழக்கமான நேரத்தில் முடிவு கிடைத்த இறுதிப்போட்டி இது தான்.

* 1998-ம் ஆண்டு பிரான்ஸ் அணி உலக கோப்பையை முதல்முறையாக வென்ற போது, அந்த அணியில் இடம் பிடித்திருந்த டெஸ்சாம்ப்ஸ் தான் தற்போதைய பிரான்சின் பயிற்சியாளராக இருக்கிறார். ஒரு வீரராகவும், பயிற்சியாளராகவும் கோப்பைக்கு முத்தமிட்ட 3-வது நபர் என்ற சிறப்பை அவர் பெறுகிறார். இதற்கு முன்பு மரியோ ஜகல்லோ (பிரேசில்), பிராங்ஸ் பெக்கென்பயூர் (மேற்கு ஜெர்மனி) ஆகியோர் இந்த பெருமைக்குரியவர்கள் ஆவர்.

* குரோஷிய வீரர் மான்ட்ஜூகிச், உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் சுயகோல் (ஓன் கோல்) அடித்த முதல் வீரர் என்ற அவப்பெருக்கு ஆளானார். இந்த உலக கோப்பையில் மொத்தம் 12 சுயகோல் பதிவானது. இதற்கு முன்பு 1998-ம் ஆண்டு உலக கோப்பையில் 6 சுயகோல் அடிக்கப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது.

* 1958-ம் ஆண்டு பீலேவுக்கு பிறகு இறுதிப்போட்டியில் கோல் போட்ட இளம் வீரர் என்ற மகிமையை 19 வயதான பிரான்ஸ் ‘புயல்’ கைலியன் பாப்பே பெற்றார்.

* 1970-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் பிரேசில் அணி 4-1 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தி இருந்தது. அதன் பிறகு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் 4 கோல்கள் திணித்த அணி பிரான்ஸ் தான்.

Next Story