இனவெறி சர்ச்சை: ஜெர்மனி கால்பந்து அணி வீரர் ஒசில் ஓய்வு


இனவெறி சர்ச்சை: ஜெர்மனி கால்பந்து அணி வீரர் ஒசில் ஓய்வு
x
தினத்தந்தி 23 July 2018 10:33 PM GMT (Updated: 23 July 2018 10:33 PM GMT)

ஜெர்மனி கால்பந்து அணியின் முன்னணி வீரரான மெசுட் ஒசில் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

பெர்லின்,

சமீபத்தில் ரஷியாவில் நடந்த 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களம் கண்ட ஜெர்மனி அணி லீக் ஆட்டத்தில் ஒரு வெற்றி, 2 தோல்வியுடன் முதல் சுற்றுடன் அதிர்ச்சிகரமாக வெளியேறியது.

இந்த போட்டிக்கு முன்பு ஜெர்மனி அணியின் நடுகள வீரரான மெசுட் ஒசில், லண்டனில் வைத்து துருக்கி நாட்டு அதிபர் தாயிப் எர்டோகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஜெர்மனி பத்திரிகைகளில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. மெசுட் ஒசிலின் பெற்றோர் துருக்கியில் இருந்து ஜெர்மனிக்கு குடிபெயர்ந்தவர்கள் என்பதால் மெசுட் ஒசில் ஜெர்மனி அணிக்கு விசுவாசமானவராக எப்படி இருப்பார் என்றும் கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக மெசுட் ஒசில் அறிவித்துள்ளார். இது குறித்து மெசுட் ஒசில் தனது டுவிட்டர் பதிவில், ‘எனது பூர்விகம் துருக்கி தான். அந்த நாட்டு அதிபரை சந்தித்ததில் எந்தவித அரசியல் உள்நோக்கமும் கிடையாது. கால்பந்து வீரர் என்ற முறையில் தான் அவரை சந்தித்தேன். இந்த பிரச்சினையினால் எழுந்த மோசமான விமர்சனங்கள் மற்றும் அவமரியாதை என்னை கடந்த சில மாதங்களாக வெகுவாக பாதித்தது. இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஜெர்மனி கால்பந்து சங்கமும், குறிப்பாக அதன் தலைவர் ரிச்சர்ட் கிரின்டெலும் முன்வரவில்லை. அவரும் இனவெறியுடன் தான் நடந்து கொள்கிறார். என்தரப்பு விளக்கத்தை அவர் கேட்கவில்லை. உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி அணி கண்ட தோல்விக்கு கூட நான் தான் காரணம் என்று சொல்லி பலிகடாவாக ஆக்க முயற்சிக்கிறார்கள். இனிமேலும் ஜெர்மனி அணியில் நீடிக்க விரும்பவில்லை. எனவே சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து விடைபெறுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

29 வயதான மெசுட் ஒசில் நடுகளத்தில் சிறப்பான தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடியவர். அவர் ஜெர்மனி அணிக்காக 92 சர்வதேச போட்டியில் விளையாடி 23 கோல்கள் அடித்துள்ளார்.

மெசுட் ஒசிலுக்கு, இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் ‘வீரர் ஒருவருக்கு இனவெறி பிரச்சினை என்பதை கேட்கவே வேதனையாக இருக்கிறது. எந்தவொரு சூழ்நிலையிலும் இனவெறி ஏற்றுக்கொள்ள முடியாததாகும்’ என்று தெரிவித்துள்ளார்.

Next Story