துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 24 July 2018 9:30 PM GMT (Updated: 24 July 2018 7:57 PM GMT)

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இலங்கை அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ஆடுகிறது.


* 19 வயதுக்கு உட்பட்ட இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இலங்கையில் உள்ள ஹம்பன்டோட்டாவில் நேற்று தொடங்கியது. 4 நாள் ஆட்டமான இந்த போட்டியில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இந்திய ஜூனியர் அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் 90 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 428 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் அதர்வா டெய்ட் 172 பந்துகளில் 20 பவுண்டரி, 3 சிக்சருடன் 177 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். பவான் ஷா 227 பந்துகளில் 19 பவுண்டரியுடன் 177 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் உள்ளார்.

* இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியில் கடந்த ஆண்டு அறிமுகம் ஆன பெங்களூரு எப்.சி. அணியின் கேப்டனாக இருந்த இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரியின் ஒப்பந்தம் மேலும் ஒரு ஆண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் இந்த சீசனிலும் பெங்களூரு எப்.சி. அணியில் தொடருவார்.

* 12-வது உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு (2019) மே மற்றும் ஜூன் மாதம் நடக்கிறது. இந்த நிலையில் வெஸ்ட்இண்டீசில் அக்டோபர் மாதம் நடைபெறும் சூப்பர் 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளுமாறு வெய்ன் பிராவோ, டேரன் பிராவோ, பொல்லார்ட், சுனில் நரின் ஆகியோருக்கு வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த போட்டியில் அவர்கள் 4 பேரும் சிறப்பாக செயல்பட்டால், உலக கோப்பை போட்டிக்கான வெஸ்ட்இண்டீஸ் அணியில் இடம் பிடிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுனில் நரின், டேரன் பிராவோ, பொல்லார்ட் ஆகியோர் கடைசியாக 2016-ம் ஆண்டில் ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம் பிடித்து இருந்தனர். வெய்ன் பிராவோ 4 வருடங்களுக்கு முன்பு அணியில் இடம் பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

* தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இலங்கை அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ஆடுகிறது. முதலாவது ஒருநாள் போட்டி தம்புல்லாவில் வருகிற 29-ந் தேதி நடக்கிறது. இதற்கான இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதத்தில் இலங்கை ஒருநாள் மற்றும் 20 ஓவர் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட மேத்யூஸ் வங்காளதேசத்தில் நடந்த 3 நாடுகள் போட்டியின் முதல் ஆட்டத்தின் போது தசைப்பிடிப்பு காயம் அடைந்து விலகினார். அதன் பிறகு தற்போது அவர் மீண்டும் கேப்டன் பதவிக்கு திரும்புகிறார். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கி 2 டெஸ்ட் மற்றும் 4 ஒருநாள் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்ட சன்டிமால், ஒழுங்கீன நடவடிக்கை காரணமாக அணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட குணதிலகா ஆகியோருக்கு அணியில் இடம் அளிக்கப்படவில்லை.

Next Story