கால்பந்து

துளிகள் + "||" + Drops

துளிகள்

துளிகள்
ஸ்பெயின் கால்பந்து அணியின் முன்னணி வீரர் ஜெரார்டு பிக்யூ சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

* ஹோ சி மின் சிட்டியில் நடந்த வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் அஜய் ஜெயராம், ருஸ்டாவிடோவை (இந்தோனேஷியா) எதிர்கொண்டார். இதில் அஜய் ஜெயராம் 14-21, 10-21 என்ற நேர் செட்டில் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தார்.

* ஸ்பெயின் கால்பந்து அணியின் முன்னணி வீரர் ஜெரார்டு பிக்யூ சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 31 வயதான பிக்யூ, கடைசியாக உலக கோப்பை தொடரில் ரஷியாவுக்கு எதிரான நாக்-அவுட் சுற்றில் விளையாடி இருந்தார். இதுவரை 102 சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ள பிக்யூ, இனி பார்சிலோனா கிளப்புக்காக ஆடுவதில் கவனம் செலுத்தப்போவதாக கூறியுள்ளார்.

* இந்தியா ‘ஏ’ - தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகள் இடையிலான 2-வது அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டி (4 நாள் ஆட்டம்) பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய ‘ஏ’ அணி 345 ரன்களில் ஆல்-அவுட் ஆனதை தொடர்ந்து, தனது முதல் இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்க ‘ஏ’ அணி 2-வது நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்திருந்தது. 3-வது நாளான நேற்றைய தினம் மழையால் ஆட்டத்தின் பெரும்பகுதி பாதிக்கப்பட்டது. 32.4 ஓவர்கள் மட்டுமே மேற்கொண்டு வீசப்பட்ட நிலையில், தென்ஆப்பிரிக்க ‘ஏ’ அணி 7 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.

* இந்தியா ஏ, இந்தியா பி, ஆஸ்திரேலியா ஏ, தென்ஆப்பிரிக்கா ஏ அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது. இதில் இந்திய பி அணியில் இடம் பிடித்திருந்த தமிழகத்தை சேர்ந்த ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர், தசைப்பிடிப்பு காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாததால் இந்த போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

* லண்டன் லார்ட்ஸ் டெஸ்டில் 137 ரன்கள் குவித்த இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் 29 வயதான கிறிஸ் வோக்சுக்கு அது தான் முதல் சர்வதேச சதமாகும். பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‘லார்ட்ஸ் மைதானத்தில் எழுந்து நின்று கைதட்டி உற்சாகப்படுத்தும் ரசிகர்களுக்கு மத்தியில் பேட்டை உயர்த்தி (சதம் அடித்து) காட்ட வேண்டும் என்பது எனது சிறு வயது கனவு. அது நனவாகி இருப்பது அற்புதமான உணர்வை தருகிறது. சதத்தை எட்டியதும் நான் சிறுபிள்ளை போல் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாக சக வீரர்கள் கூறினார்கள். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் 90 ரன்களை தாண்டியதுமே கொஞ்சம் பதற்றம் வந்து விட்டது. அது மட்டுமின்றி சதத்தை எப்படி கொண்டாட வேண்டும் என்பது எனக்கு தெரியவில்லை. மூன்று இலக்கத்தை தொட்டதும் சில வினாடிகள் எல்லாமே வெறுமையாக தோன்றியது. மொத்தத்தில் இது எனக்கு தித்திப்பான நாளாக அமைந்தது’ என்றார்.

* பிரேசில் கால்பந்து அணியின் முன்னாள் ஜாம்பவான் ரொனால்டோ, ஜாலி பயணமாக ஸ்பெயினில் உள்ள இபிஜா தீவுக்கு சென்றிருந்தார். அங்கு அவர் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டார். சுவாச பிரச்சினை மற்றும் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள அவர் உடனடியாக தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது உடல்நலம் தேறி வருவதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன. 41 வயதான ரொனால்டோ உலக கோப்பை கால்பந்து போட்டிகளில் 15 கோல்கள் அடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.