கால்பந்து

துளிகள் + "||" + Drops

துளிகள்

துளிகள்
சென்னையின் எப்.சி. அணியில் 3 இளம் வீரர்கள் ஒப்பந்தம் ஆகியுள்ளனர்.

சென்னையின் எப்.சி. அணியில் 3 இளம் வீரர்கள் ஒப்பந்தம்

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டிக்கான சென்னையின் எப்.சி. அணியில் இந்திய இளம் வீரர்களான ரஹிம் அலி, அபிஜித் சர்கார், தீபக் தாங்ரி ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூன்று பேரும் 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக சென்னையின் எப்.சி. அணி நிர்வாகம் நேற்று அறிவித்தது. இந்த 3 வீரர்களும் 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியில் இடம் பிடித்துள்ளவர்கள். அபிஜித் சர்கார், ரஹிம் அலி (இருவரும் மேற்கு வங்காளம்) ஆகியோர் கடந்த ஆண்டு நடந்த 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டியில் இந்திய அணிக்காக விளையாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


முன்னாள் ரஞ்சி கிரிக்கெட் வீரர் தற்கொலை

உத்தரபிரதேசத்தை சேர்ந்த முன்னாள் ரஞ்சி கிரிக்கெட் வீரர் தருண் சுக்லா (வயது 56) வட கிழக்கு ரெயில்வேயில் துணை தலைமை வணிக மேலாளராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் அவர் தனது வீட்டில் பிணமாக கிடந்தார். அருகில் கை துப்பாக்கியும் கிடந்தது. அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. அவர் தற்கொலை செய்யும் முன்பு எழுதி வைத்துள்ள கடிதத்தில் எனது சாவுக்கு யாரும் காரணமில்லை என்றும் தயவு செய்து இது குறித்து யாரிடமும் விசாரணை நடத்த வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். தருண் சுக்லாவுக்கு மனைவியும், 2 மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

உலக துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்

உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவில் உள்ள சாங்வான் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஜூனியர் ஏர் ரைபிள் கலப்பு அணிகள் பிரிவில் ஸ்ரேயா அக்ரவால், திவ்யான்ஷ் சிங் பன்வால் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 435 புள்ளிகள் குவித்து வெண்கலப்பதக்கம் வென்றது. இத்தாலி அணி தங்கப்பதக்கத்தையும், ஈரான் அணி வெள்ளிப்பதக்கத்தையும் கைப்பற்றியது.

குக்கின் கனவு அணியில் இந்தியர்களுக்கு இடமில்லை

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் அலஸ்டயர் குக் தனது கனவு டெஸ்ட் அணியை அறிவித்துள்ளார். அந்த அணியில் கிரகாம் கூச் (கேப்டன்), மேத்யூ ஹைடன், பிரையன் லாரா, ரிக்கி பாண்டிங், டிவில்லியர்ஸ், சங்கக்கரா, காலிஸ், முரளிதரன், வார்னே, ஜேம்ஸ் ஆண்டர்சன், மெக்ராத் ஆகியோருக்கு இடம் வழங்கி உள்ளார். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவரான இந்திய ஜாம்பவான் தெண்டுல்கர், டிராவிட், விராட்கோலி உள்பட இந்தியர்கள் யாரையும் அவர் கனவு அணிக்கு தேர்வு செய்யவில்லை. இதற்கிடையில் குக் அளித்த ஒரு பேட்டியில், ‘ஓய்வு குறித்து கடந்த 6 மாதங்களாக சிந்தித்து கொண்டு இருந்தேன். ஓய்வு முடிவை சக வீரர்களிடம் சொல்லும் போது எனக்கு கண்ணீர் வந்துவிட்டது. இத்தனைக்கும் அப்போது பீர் குடித்து இருந்தேன். இல்லாவிட்டால் கதறி அழுது இருப்பேன்’ என்று தெரிவித்துள்ளார்.