ஐ.எஸ்.எல். கால்பந்து: வெற்றியுடன் தொடங்கியது கேரளா கொல்கத்தாவை சாய்த்தது


ஐ.எஸ்.எல். கால்பந்து: வெற்றியுடன் தொடங்கியது கேரளா கொல்கத்தாவை சாய்த்தது
x
தினத்தந்தி 29 Sep 2018 11:00 PM GMT (Updated: 29 Sep 2018 9:13 PM GMT)

5–வது ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் தொடக்க ஆட்டத்தில் கேரளா அணி 2–0 என்ற கோல் கணக்கில் கொல்கத்தாவை சாய்த்தது.

கொல்கத்தா, 

5–வது ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் தொடக்க ஆட்டத்தில் கேரளா அணி 2–0 என்ற கோல் கணக்கில் கொல்கத்தாவை சாய்த்தது.

ஐ.எஸ்.எல். கால்பந்து

5–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து திருவிழா நேற்று தொடங்கியது. இதில் சென்னையின் எப்.சி., பெங்களூரு எப்.சி., நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி), எப்.சி.கோவா, மும்பை சிட்டி, ஜாம்ஷெட்பூர், அட்லெடிகோ டி கொல்கத்தா, கேரளா பிளாஸ்டர்ஸ், டெல்லி டைனமோஸ், புனே சிட்டி ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

கொல்கத்தாவில் நேற்றிரவு அரங்கேறிய தொடக்க லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தா அணி, கேரளா பிளாஸ்டர்சை சந்தித்தது. ஆட்டத்திற்கு முன்பாக கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

விறுவிறுப்பான இந்த மோதலில் இரு அணிகளும் ஏறக்குறைய சரிசமமாக ஆதிக்கம் செலுத்தின. 26–வது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் எவர்டான் சான்டோஸ் அடித்த சூப்பரான ஷாட் மயிரிழையில் நழுவிப்போனது. இதே போல் 32–வது நிமிடத்தில் கேரளாவின் அப்துல் சமத் அடித்த ஷாட்டை, கொல்கத்தா கோல் கீப்பர் அரிந்தம் பாய்ந்து விழுந்து தடுத்தார். முதல் பாதியில் கோல் ஏதும் விழவில்லை.

கேரளா வெற்றி

பிற்பாதியில் கேரளா வீரர்களின் கை ஓங்கியது. 77–வது நிமிடத்தில் கேரளாவின் ஸ்டோஜனோவிச் கோல் நோக்கி உதைத்த ஷாட்டை, கொல்கத்தாவின் ஜெர்சன் வியரா தடுத்தார். அப்போது அவரது காலில் பட்டு மேலே எகிறிய பந்தை, கேரளா வீரர் மதேஜ் பாப்லாட்னிக் தலையால் முட்டி கோலாக்கினார். இந்த சீசனில் முதல் கோல் அடித்தவர் என்ற சிறப்பை பெற்ற பாப்லாட்னிக் சுலோவேனியா நாட்டை சேர்ந்தவர் ஆவார். 86–வது நிமிடத்தில் கேரளாவின் ஸ்டோஜனோவிச் அருமையாக கோல் அடிக்க, உள்ளூர் அணி நிலைகுலைந்து போனது.

முடிவில் கேரளா பிளாஸ்டர்ஸ் 2–0 என்ற கோல் கணக்கில் கொல்கத்தாவை வீழ்த்தி இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கியது. கொல்கத்தாவை அவர்களது இடத்தில் கேரளா அணி பதம் பார்ப்பது இதுவே முதல் முறையாகும்.


Next Story