ஐ.எஸ்.எல். கால்பந்து: ஜாம்ஷெட்பூர் அணியிடம் வீழ்ந்தது மும்பை


ஐ.எஸ்.எல். கால்பந்து: ஜாம்ஷெட்பூர் அணியிடம் வீழ்ந்தது மும்பை
x
தினத்தந்தி 2 Oct 2018 10:30 PM GMT (Updated: 2 Oct 2018 10:09 PM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் ஜாம்ஷெட்பூர் அணியிடம் மும்பை வீழ்ந்தது.

கவுகாத்தி,

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணி 0-2 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூரிடம் வீழ்ந்தது.

5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னையின் எப்.சி., பெங்களூரு எப்.சி., நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி), எப்.சி.கோவா, மும்பை சிட்டி, ஜாம்ஷெட்பூர், அட்லெடிகோ டி கொல்கத்தா, கேரளா பிளாஸ்டர்ஸ், டெல்லி டைனமோஸ், புனே சிட்டி ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

இந்த நிலையில் மும்பையில் நேற்றிரவு நடந்த 4-வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி- ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த மோதலில் 28-வது நிமிடத்தில் ஜாம்ஜெட்பூர் வீரர் மரியோ ஆர்கஸ் கோல் போட்டு உள்ளூர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

இதையடுத்து மும்பை வீரர்கள் பதிலடி கொடுக்க தங்களது வேகத்தை தீவிரப்படுத்தினர். 51-வது நிமிடத்தில் மும்பைக்கு கோல் அடிக்க பொன்னான வாய்ப்பு கிட்டியது. எதிரணியின் கோல் பகுதிக்குள் ஊடுருவிய மும்பை வீரர் ரபெல் பாஸ்டோஸ் அடித்த பந்தை, ஜாம்ஷெட்பூர் கோல் கீப்பர் சுபாசிஸ் ராய் முன்னோக்கி வந்து காலால் தடுத்து வெளியே தள்ளினார். மும்பை வீரர்கள் இடைவிடாது தாக்குதல் தொடுத்தனர்.

76-வது நிமிடத்தில் மும்பை வீரர் முகமது ரபிக்கும், 83-வது நிமிடத்தில் ‘பிரிகிக்’ வாய்ப்பில் மும்பை அணியின் மோடோ சோகோவும் பந்தை வலைக்குள் அனுப்பினர். இரண்டு முறையும் ‘ஆப்-சைடு’ என்று நடுவர் அறிவித்ததால் ஏமாற்றத்திற்கு உள்ளானார்கள். கடைசி நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் மேலும் ஒரு கோல் திணித்தது. மும்பை வீரர் மதியாஸ் மிராபாஜி, ஜாம்ஷெட்பூர் மாற்று ஆட்டக்காரர் பாப்லோ மோர்கடோவின் முயற்சியை முறியடிக்க அவரை தள்ளிவிட்ட போதிலும் அதற்குள் மோர்கடோ பந்தை வலைக்குள் அடித்து அசத்தினார். முடிவில் ஜாம்ஷெட்பூர் அணி 2-0 என்ற கோல் கணக்கில் மும்பையை வீழ்த்தியது.

டெல்லி நேரு ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 5-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ்-புனே சிட்டி அணிகள் சந்திக்கின்றன. இந்த போட்டியின் முக்கிய அம்சமே பயிற்சியாளர்கள் தான். கடந்த முறை டெல்லி அணிக்கு பயிற்சியாளராக இருந்த மிக்யூல் ஏஞ்சல் (ஸ்பெயின்) இந்த சீசனில் புனே அணியின் பயிற்சியாளராக மாறி இருக்கிறார். கடந்த ஆண்டு அவரது பயிற்சியின் கீழ் டெல்லி அணி 8-வது இடத்தையே பிடித்தது. தற்போது புதிய அணியுடன் இணைந்து வெற்றிகரமாக தொடங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார். டெல்லி அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இருக்கும் ஜோசப் கோம்பாவும் ஸ்பெயினைச் சேர்ந்தவர் என்பது கவனிக்கத்தக்கது.


Next Story