ஐ.எஸ்.எல். கால்பந்து: வெற்றி கணக்கை தொடங்குமா சென்னை அணி? - கவுகாத்தியுடன் இன்று மோதல்


ஐ.எஸ்.எல். கால்பந்து: வெற்றி கணக்கை தொடங்குமா சென்னை அணி? - கவுகாத்தியுடன் இன்று மோதல்
x
தினத்தந்தி 17 Oct 2018 11:15 PM GMT (Updated: 17 Oct 2018 7:46 PM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து திருவிழாவில் சென்னையில் இன்று (வியாழக்கிழமை) இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை-கவுகாத்தி அணிகள் மோதுகின்றன.

சென்னை,

10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெறும் 11-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. (கவுகாத்தி) அணிகள் மோதுகின்றன.

நடப்பு சாம்பியனான சென்னை அணி தனது முதல் ஆட்டத்தில் பெங்களூரு அணியிடமும் (0-1), 2-வது ஆட்டத்தில் கோவா அணியிடமும் (1-3) தோல்வியை தழுவியது. கவுகாத்தி அணி முதல் ஆட்டத்தில் கோவாவுடன் டிரா (2-2) கண்டது. அடுத்த ஆட்டத்தில் கொல்கத்தாவை (1-0) வென்றது.

உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் சென்னை அணி வெற்றி கணக்கை தொடங்க முழு முயற்சி மேற்கொள்ளும். நட்சத்திர வீரர்கள் ஜெஜெ லால்பெகுலா, மெயில்சன் ஆல்வ்ஸ், இனிகோ கால்ட்ரோன், அகஸ்டோ உள்ளிட்டோர் சாதிக்கும் முனைப்புடன் தயாராகி வருகிறார்கள். அதே சமயம் வெற்றிப்பயணத்தை தொடர கவுகாத்தி அணி எல்லா வகையிலும் தீவிரம் காட்டும். எனவே இந்த மோதலில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இரு அணிகளும் இதுவரை 8 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் கவுகாத்தி அணி 4 முறையும், சென்னை அணி 2 தடவையும் வெற்றி பெற்று இருக்கின்றன. 2 ஆட்டம் டிராவில் முடிந்தது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

இன்றைய ஆட்டம் குறித்து சென்னை அணியின் பயிற்சியாளர் ஜான் கிரிகோரி அளித்த பேட்டியில், ‘கவுகாத்தி அணி இந்த சீசனில் சிறப்பான தொடக்கம் கண்டு இருக்கிறது. அந்த அணியை நாங்கள் மதிக்கிறோம். அதேநேரத்தில் எங்கள் அணி வீரர்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் எங்களுக்கு வெற்றி தேடித் தரும் திறமை படைத்தவர்கள்’ என்று தெரிவித்தார்.

கவுகாத்தி அணியின் பயிற்சியாளர் எல்கோ ஸ்சாட்டோரி கருத்து தெரிவிக்கையில், ‘எந்த அணிக்கு எதிராகவும் எங்களால் சவால் அளிக்க முடியும். ஆனால் சென்னை அணியில் தனிப்பட்ட வீரர்களின் திறமை எங்களை விட அதிகமாக இருக்கிறது. இருப்பினும் அவர்களிடம் சில பலவீனங்கள் உள்ளது. அதனை நாங்கள் சரியாக பயன்படுத்தி கொள்வோம்’ என்றார்.

இதற்கிடையே, டெல்லியில் நேற்றிரவு நடந்த 10-வது லீக் ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணி 2-1 என்ற கோல் கணக்கில் டெல்லி டைனமோசை வீழ்த்தி முதலாவது வெற்றியை பதிவு செய்தது.


Next Story