தோல்வி எதிரொலி: ரியல் மாட்ரிட் கிளப் பயிற்சியாளர் ஜூலென் லோப்டெகு திடீர் நீக்கம்


தோல்வி எதிரொலி: ரியல் மாட்ரிட் கிளப் பயிற்சியாளர் ஜூலென் லோப்டெகு திடீர் நீக்கம்
x
தினத்தந்தி 30 Oct 2018 10:00 PM GMT (Updated: 30 Oct 2018 7:40 PM GMT)

தோல்வி எதிரொலியாக, ரியல் மாட்ரிட் கிளப் பயிற்சியாளர் பதவியிலிருந்து ஜூலென் லோப்டெகு திடீர் நீக்கம் செய்யப்பட்டார்.

மாட்ரிட்,

லா லிகா லீக் கால்பந்து போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த லீக் ஆட்டத்தில் பரம எதிரிகளான பார்சிலோனா-ரியல் மாட்ரிட் கிளப் அணிகள் மோதின. இதில் ரியல் மாட்ரிட் அணி 1-5 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா அணியிடம் சரண் அடைந்தது. அத்துடன் இந்த சீசனில் ரியல் மாட்ரிட் அணி இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 2 டிரா, 4 தோல்வி கண்டுள்ளது. இந்த தோல்விகளை தொடர்ந்து ரியல் மாட்ரிட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ஜூலென் லோப்டெகு திடீரென நீக்கப்பட்டுள்ளார். ரியல் மாட்ரிட் கிளப் நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ரியல் மாட்ரிட் அணியின் தற்காலிக பயிற்சியாளராக அர்ஜென்டினா அணியின் முன்னாள் வீரரான சான்டியாகோ சோலாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

52 வயதான ஜூலென் லோப்டெகு, பிரான்ஸ் முன்னாள் வீரர் ஜிடேன் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் ரியல் மாட்ரிட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். 4 மாதத்துக்குள் அவர் தனது பதவியை இழந்துள்ளார். ஸ்பெயின் அணியின் முன்னாள் கோல்கீப்பரான ஜூலென் லோப்டெகு, ஸ்பெயின் நாட்டு கால்பந்து சங்கத்திடம் தெரிவிக்காமல் ரியல் மாட்ரி கிளப் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதம் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டி தொடங்குவதற்கு சில தினங்களுக்கு முன்பு ஸ்பெயின் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story