ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி முதல் வெற்றி பெறுமா? - மும்பையுடன் இன்று மோதல்


ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி முதல் வெற்றி பெறுமா? - மும்பையுடன் இன்று மோதல்
x
தினத்தந்தி 2 Nov 2018 11:43 PM GMT (Updated: 2 Nov 2018 11:43 PM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-மும்பை சிட்டி எப்.சி. அணிகள் மோதுகின்றன.

சென்னை,

5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டித் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) இரவு நடைபெறும் 27-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, மும்பை சிட்டி எப்.சி. அணியை எதிர்கொள்கிறது.

இந்த சீசனில் சென்னை அணியின் செயல்பாடு மிகவும் மோசமாக உள்ளது. சென்னை அணி இதுவரை 5 ஆட்டத்தில் விளையாடி ஒரு டிரா, 4 தோல்வியுடன் ஒரு புள்ளி மட்டுமே பெற்றுள்ளது. மும்பை அணி 5 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி, ஒரு டிரா, 2 தோல்வியுடன் 7 புள்ளிகள் பெற்றுள்ளது. மும்பை அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் டெல்லி டைனமோஸ் அணியை வீழ்த்தியது. அந்த உத்வேகத்துடன் மும்பை அணி இந்த போட்டியில் களம் காணும்.

சென்னை அணியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜெஜெ லால்பெகுலா, மெயில்சன் ஆல்வ்ஸ் ஆகியோரின் ஆட்டம் எடுபடவில்லை. அணியின் தடுப்பாட்டமும் மெச்சும்படி இல்லை. இந்த சீசனில் இதுவரை 10 கோல்களை விட்டுக்கொடுத்து இருக்கிறார்கள். அதே நேரத்தில் ரபெல் அகஸ்டோ, ஆன்ட்ரியா ஓர்லான்டி, கார்லோஸ் சலோம் உள்ளிட்டோர் ஓரளவு நன்றாக விளையாடி வருகிறார்கள். எது எப்படி என்றாலும், ஒருங்கிணைந்த ஆட்டத்தில் ஏற்றம் கண்டால் மட்டுமே சென்னை அணியால் சரிவில் இருந்து எழுச்சி பெற முடியும்.

உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களம் காணும் சென்னை அணி முதல் வெற்றியை ருசிக்க முழு முயற்சி மேற்கொள்ளும். அதேசமயம் மும்பை அணி வெற்றி புள்ளியை அதிகரிக்க தீவிரம் காட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 8 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் சென்னை அணி 5 முறையும், மும்பை அணி 2 தடவையும் வென்று இருக்கின்றன. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

இந்த போட்டி குறித்து சென்னை அணியின் உதவி பயிற்சியாளர் சமீர் பாஷா நேற்று அளித்த பேட்டியில், ‘சென்னை அணி சரிவில் இருந்து மீண்டு வந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று நம்புகிறேன். நாளைய (இன்றைய) ஆட்டத்தில் களம் இறங்கும் வீரர்கள் யார்-யார்? என்பதை பயிற்சியாளர் ஜான் கிரிகோரி தான் முடிவு செய்வார்’ என்று தெரிவித்தார்.


Next Story