செக்ஸியாக நடனமாட தெரியுமா என கேட்ட தொகுப்பாளர் ; அதிர்ச்சி அடைந்த வீராங்கனை


செக்ஸியாக நடனமாட தெரியுமா என கேட்ட தொகுப்பாளர் ; அதிர்ச்சி அடைந்த வீராங்கனை
x
தினத்தந்தி 5 Dec 2018 10:12 AM GMT (Updated: 5 Dec 2018 10:12 AM GMT)

பலோன் டி ஓர் விருது விழாவில் சிறந்த வீராங்கனைக்கான விருது பெற்றவரிடம் தொகுப்பாளர் செக்ஸியாக நடனமாட தெரியுமா? என கேட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

பாரீஸ்,

பிரான்ஸ் நாட்டின் கால்பந்து பத்திரிகை சார்பில் ஆண்டுதோறும் உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான பலோன் டி ஓர் விருது வழங்கப்படுகிறது. கால்பந்து உலகில் மிகவும் கவுரவமும், பெருமைக்கும் உரிய இந்த விருதை இந்த ஆண்டு குரோஷிய அணியின் கேப்டன் லூக்கா மோட்ரிச் தட்டிச் சென்றுள்ளார். 2008–ம் ஆண்டில் இருந்து இந்த விருதை அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்சியும், போர்ச்சுகலின் கிறிஸ்டியானா ரொனால்டோவும் மாறி மாறி பெற்று வந்தனர். அவர்களின் ஆதிக்கத்திற்கு மோட்ரிச் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். விருது பட்டியலில் இருந்த ரொனால்டோ 2–வது இடத்தையும், பிரான்ஸ் வீரர் கிரீஸ்மான் 3–வது இடத்தையும் பெற்றனர்.

சிறந்த வீராங்கனைக்கான பலோன் டி ஓர் விருதுக்கு நார்வே வீராங்கனை அடா ஹிஜெர்பர்க்கும், 21 வயதுக்குட்பட்டோருக்கான இந்த விருதுக்கு பிரான்ஸ் வீரர் கைலியன் பாப்பேவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

விருது வழங்கும் விழாவில், கால்பந்து வீராங்கனையிடம் செக்ஸியாக நடனமாட தெரியுமா என தொகுப்பாளர் பேசியுள்ள வீடியோ காட்சி தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த இந்த விருது முதன்முறையாக பெண்கள் கால்பந்து வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதன்படி நார்வேயைச் சேர்ந்த 23 வயதான கால்பந்து வீராங்கனை அடா ஹஜிர்பெர்க்குக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டது. விருதினை பெறுவதற்காக அடா, மேடைக்கு வந்திருந்தார். அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய மார்டின் சொல்வேஜ், "உங்களுக்கு செக்ஸியாக நடனமாடத் தெரியுமா?" என கேள்வியெழுப்பியுள்ளார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அடா, உடனடியாக "இல்லை" என பதிலளித்து முகம் சுளித்தபடியே அங்கிருந்து கிளம்ப முற்பட்டுள்ளார். ஆனால் மற்றொரு தொகுப்பாளர் அதனை சரி செய்து, இயல்பாக மாற்றியிருக்கிறார்.

இந்த விவகாரமானது இணையத்தளம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து தன்னுடைய தவறுக்கு வருந்திய தொகுப்பாளர் மார்டின், தான் பெண்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும், நகைச்சுவைக்காக தான் அப்படி கூறினேன் என தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் மன்னிப்பு கோரியுள்ளார்.


Next Story