கால்பந்து

கிளப் உலக கோப்பை கால்பந்து: 4–வது முறையாக கோப்பையை வென்று ரியல்மாட்ரிட் அணி சாதனை + "||" + 4th time Real Madrid team record of winning the trophy

கிளப் உலக கோப்பை கால்பந்து: 4–வது முறையாக கோப்பையை வென்று ரியல்மாட்ரிட் அணி சாதனை

கிளப் உலக கோப்பை கால்பந்து: 4–வது முறையாக கோப்பையை வென்று ரியல்மாட்ரிட் அணி சாதனை
கிளப் அணிகளுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டியில் ரியல்மாட்ரிட் அணி 4–வது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.

அபுதாபி, 

கிளப் அணிகளுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டியில் ரியல்மாட்ரிட் அணி 4–வது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.

கிளப் கால்பந்து

கிளப் அணிகளுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று முன்தினம் இரவு அபுதாபியில் அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்)– அல் அய்ன் (ஐக்கிய அரபு அமீரகம்) அணிகள் மோதின.

நட்சத்திர பட்டாளங்களை உள்ளடக்கிய அனுபவம் வாய்ந்த ரியல் மாட்ரிட் அணியினர் தொடக்கம் முதலே எதிரணியின் கோல் கம்பத்தை அலைஅலையாக முற்றுகையிட்டு ஷாட்டுகளை அடித்தனர். 14–வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் வீரர் லூக்கா மோட்ரிச் கோல் அடித்து தங்கள் அணிக்கு முன்னிலையை ஏற்படுத்தி தந்தார். மோட்ரிச், உலகின் சிறந்த வீரர் விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முழுமையாக ஆதிக்கம் செலுத்திய ரியல் மாட்ரிட் அணியினர் வசமே பந்து பெரும்பாலும் (63 சதவீதம்) சுற்றிக்கொண்டிருந்தது. பல கோல் வாய்ப்புகள் மயிரிழையில் நழுவிப் போயின. காரெத் பாலே அடித்த ஒரு ஷாட் கம்பத்திற்கு சற்று மேல்வாக்கில் சென்று விட்டது. 60–வது நிமிடத்தில் மாட்ரிட் அணி 2–வது கோலை திணித்தது. மார்கஸ் லோரென்ட் 23 மீட்டர் தூரத்தில் இருந்து பிரமாதமாக பந்தை வலைக்குள் அனுப்பினார். 78–வது நிமிடத்தில் கார்னர் பகுதியில் இருந்து உதைக்கப்பட்ட பந்தை மாட்ரிட் கேப்டன் செர்ஜியோ ரமோஸ் தலையால் முட்டி கோலாக்கினார்.

ரியல் மாட்ரிட் சாம்பியன்

பதில் கோல் திருப்ப முயற்சித்த அல் அய்ன் அணிக்கு 86–வது நிமிடத்தில் பலன் கிடைத்தது. அந்த அணி வீரர் சுகாசா ஷியோட்டானி கோல் அடித்து உள்ளூர் ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்தார். ஆனால் கடைசி நிமிடத்தில் அல் அய்ன் வீரர் யாஹியா நடெர் தங்களது கோல் வலையின் பக்கத்தில் நின்று எதிரணி வீரர் அடித்த ஷாட்டை தடுக்க முற்பட்ட போது, எதிர்பாராத விதமாக பந்து அவரது காலில் பட்டு வலைக்குள் திரும்பி சுயகோலாக மாறியது.

முடிவில் ரியல் மாட்ரிட் 4–1 என்ற கோல் கணக்கில் அல் அய்ன் அணியை தோற்கடித்து கோப்பையை தட்டிச்சென்றது. கிளப் உலக கோப்பையை ரியல் மாட்ரிட் உச்சிமுகர்வது இது 4–வது முறையாகும். ஏற்கனவே 2014, 2016, 2017–ம் ஆண்டுகளிலும் வாகை சூடியிருந்தது. இதன் மூலம் இந்த கோப்பையை அதிக முறை வென்ற பார்சிலோனா (ஸ்பெயின்) கிளப்பின் (3 முறை) சாதனையை முறியடித்தது.

ரியல்மாட்ரிட் பயிற்சியாளர் சான்டியாகோ சோலாரி கூறுகையில், ‘இந்த வெற்றிக்கு ரியல்மாட்ரிட் வீரர்கள் தகுதியானர்கள். ஒவ்வொரு கோப்பையின் வெற்றிக்காகவும் கடுமையாக உழைக்கிறார்கள். கிளப் உலக கோப்பையை தொடர்ந்து 3–வது முறையாக வென்று இருப்பது சிறப்பான சாதனையாகும்’ என்றார்.