ஆசிய கோப்பை கால்பந்து: அமீரகத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது கத்தார் அணி மைதானத்திற்குள் ரசிகர்கள் செருப்பு வீச்சு


ஆசிய கோப்பை கால்பந்து: அமீரகத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது கத்தார் அணி மைதானத்திற்குள் ரசிகர்கள் செருப்பு வீச்சு
x
தினத்தந்தி 29 Jan 2019 10:33 PM GMT (Updated: 29 Jan 2019 10:33 PM GMT)

17-வது ஆசிய கோப்பை கால்பந்து தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் அபுதாபியில் நேற்று நடந்த அரைஇறுதியில் கத்தார் அணி, ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொண்டது.

அபுதாபி,

உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களம் புகுந்த ஐக்கிய அரபு அமீரகம் அணி எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்கவில்லை. அபாரமாக ஆடிய கத்தார் அணி 4-0 என்ற கோல் கணக்கில் அமீரகத்தை தோற்கடித்து முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தது. அந்த அணியில் போலெம் கோகி (22-வது நிமிடம்), அல்மோஸ் அலி (37-வது நிமிடம்), ஹசன் அலி ஹைடோஸ் (80-வது நிமிடம்), ஹமித் இஸ்மாயில் (90-வது நிமிடம்) ஆகியோர் கோல் போட்டனர்.

முன்னதாக கத்தார் அணி கோல் அடித்த போது, ஆத்திரமடைந்த உள்ளூர் ரசிகர்களில் சிலர் மைதானத்திற்குள் செருப்புகளை தூக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இன்னொரு முறை தண்ணீர் பாட்டில்களை எறிந்தனர். இதனால் இரண்டு முறை ஆட்டம் பாதிக்கப்பட்டது. கத்தாருக்கு எதிராக ரசிகர்கள் அவ்வப்போது கோஷங்கள் எழுப்பியதால் ஆட்டம் முழுவதும் பரபரப்பாகவே காணப்பட்டது. வருகிற 1-ந்தேதி நடக்கும் இறுதி ஆட்டத்தில் கத்தார் அணி, ஜப்பானை எதிர்கொள்கிறது.

Next Story