ஆசிய கோப்பை கால்பந்து: ஜப்பானை வீழ்த்தி கத்தார் ‘சாம்பியன்’


ஆசிய கோப்பை கால்பந்து: ஜப்பானை வீழ்த்தி கத்தார் ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 1 Feb 2019 10:32 PM GMT (Updated: 1 Feb 2019 10:32 PM GMT)

ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில், ஜப்பானை வீழ்த்தி கத்தார் சாம்பியன் பட்டம் வென்றது.

அபுதாபி,

17-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த மாதம் 5-ந்தேதி தொடங்கியது. 24 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் இந்திய அணி லீக் சுற்றோடு வெளியேறியது. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா கால்இறுதியை தாண்டவில்லை.

ஜப்பானும், கத்தாரும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தன. இவ்விரு அணிகளில் பட்டம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் அபுதாபியில் நேற்று நடந்தது. விறுவிறுப்பான இந்த போட்டியில் 12-வது நிமிடத்தில் கத்தார் வீரர் 22 வயதான அல்மோஸ் அலி, அந்தரத்தில் பல்டி அடித்தபடி பிரமாதமாக கோல் அடித்தார். நடப்பு தொடரில் அவரது 9-வது கோல் இதுவாகும். ஆசிய கோப்பை போட்டியில், ஒரு தொடரில் அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார். 27-வது நிமிடத்தில் கத்தார் மற்றொரு கோலை திணித்தது. அந்த அணியின் அப்டேலாஜிஸ் ஹாதிம் இடது காலால் உதைத்து பந்தை வலைக்குள் அனுப்பினார். பதிலடி கொடுக்க போராடிய ஜப்பான் அணி 69-வது நிமிடத்தில் கோல் திருப்பியது. பிறகு மேலும் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வர ஜப்பான் முயற்சித்த நிலையில், 83-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கத்தார் வீரர் அக்ரம் ஹசன் ஆபிப் கோலாக்கி எதிரணியை நிலைகுலைய வைத்தார்.

முடிவில் கத்தார் அணி 3-1 என்ற கோல் கணக்கில் முன்னாள் சாம்பியன் ஜப்பானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி வரலாறு படைத்தது. 63 ஆண்டு கால ஆசிய கோப்பை கால்பந்து வரலாற்றில் கத்தார் அணி மகுடம் சூடுவது இதுவே முதல் முறையாகும். இந்த வெற்றியின் மூலம் 2021-ம் ஆண்டில் நடக்கும் ‘பிபா’ கான்பெடரேஷன் கோப்பை போட்டிக்கும் கத்தார் தகுதி பெற்றது.


Next Story