கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-பெங்களூரு அணிகள் இன்று மோதல் + "||" + ISL Football: Chennai-Bangalore teams face today

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-பெங்களூரு அணிகள் இன்று மோதல்

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-பெங்களூரு அணிகள் இன்று மோதல்
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், சென்னை-பெங்களூரு அணிகள் இன்று மோத உள்ளன.
சென்னை, 

5-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.) தொடரில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 73-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-பெங்களூரு எப்.சி. அணிகள் மோதுகின்றன. அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட நடப்பு சாம்பியனான சென்னை அணி இதுவரை 14 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 2 டிரா, 11 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. 

இந்த சீசனில் உள்ளூரில் சென்னை அணி 7 ஆட்டத்தில் ஆடி ஒரு டிரா, 6 தோல்வியை சந்தித்துள்ளது. உள்ளூரில் சென்னை அணி வெற்றிக் கணக்கை தொடங்குமா? என்று ரசிகர்கள் ஏக்கமுடன் காத்திருக்கிறார்கள். அதேநேரத்தில் பெங்களூரு அணி 14 ஆட்டங்களில் விளையாடி 9 வெற்றி, 4 டிரா, ஒரு தோல்வியுடன் புள்ளி பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் சுனில் சேத்ரி, உதன்டாசிங் ஆகியோருக்கு இன்றைய ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்படுகிறது. ஆனாலும் பெங்களூரு அணி வலுவானதாகவே காணப்படுகிறது. பெங்களூருவில் நடந்த முந்தைய லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி 1-0 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி இருந்தது. எனவே இன்றைய ஆட்டம் சென்னை அணிக்கு கடும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இரு அணிகளும் இதுவரை மொத்தத்தில் 4 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் இரு அணிகளும் தலா 2 வெற்றி பெற்றுள்ளன. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

இதற்கிடையே நேற்றிரவு நடந்த லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணி 1-0 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டியை வீழ்த்தி 5-வது வெற்றியை பதிவு செய்தது.