ஜெர்மனி தூதரகம் ஏற்பாட்டின் பேரில் சென்னையில் இளம் கால்பந்து வீரர்களுக்கு பயிற்சி


ஜெர்மனி தூதரகம் ஏற்பாட்டின் பேரில் சென்னையில் இளம் கால்பந்து வீரர்களுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 31 May 2019 10:00 PM GMT (Updated: 31 May 2019 8:48 PM GMT)

ஜெர்மனி தூதரகம் ஏற்பாட்டின் பேரில் சென்னையில் இளம் கால்பந்து வீரர், வீராங்கனைகளுக்கு ஜெர்மனி பெண் பயிற்சியாளர் பயிற்சி அளிக்கிறார்.

சென்னை,

ஜெர்மனி தூதரகம் ஏற்பாட்டின் பேரில் சென்னையில் இளம் கால்பந்து வீரர், வீராங்கனைகளுக்கு ஜெர்மனி பெண் பயிற்சியாளர் பயிற்சி அளிக்கிறார்.

கால்பந்து பயிற்சி

சென்னையில் உள்ள ஜெர்மனி நாட்டு தூதரகம் தமிழ்நாட்டில் பல்வேறு சமூக நலப்பணிகளை செய்து வருகிறது. பெண் தூதராக பொறுப்பேற்றுள்ள ஹாரின் ஸ்டோல் ஏழை, எளிய மாணவர்களின் திறனை வளர்க்க முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக வருகிற 12 மற்றும் 13–ந் தேதிகளில் சென்னையில் பள்ளிக்கூட மாணவ–மாணவிகளுக்கு கால்பந்து பயிற்சி அளிப்பதற்காக ஜெர்மனி நாட்டில் இருந்து அந்த நாட்டு கால்பந்து சங்க பெண் பயிற்சியாளர் வில்ட்ரட் மெல்பாம் ஸ்டாலெர் என்பவரை வரவழைக்க ஏற்பாடு செய்துள்ளார்.

12–ந் தேதி பகல் 12 மணிக்கு சென்னையில் உள்ள பள்ளிக்கூட மாணவ–மாணவிகளுக்கும் அவர்களது கால்பந்து பயிற்சியாளர்களுக்கும் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் 13–ந் தேதி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ராஜா அண்ணாமலைபுரத்தில் ரஷ் உள் விளையாட்டு அரங்கில் கிராமப்புற மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

நவீன தொழில்நுட்பம்

சென்னைக்கு வரும் ஜெர்மனி கால்பந்து பயிற்சியாளர் வில்ட்ரட் ஜெர்மனியில் பல திறமையான கால்பந்து வீரர்களை உருவாக்கி உள்ளார். அந்த நாட்டு கால்பந்து விளையாட்டில் என்னென்ன நிபுணத்துவம், தொழில்நுட்பம் ஆகியவை பயன்படுத்தப்படுகிறதோ? அவற்றையெல்லாம் சென்னையில் உள்ள பள்ளிக்கூட மாணவர்களுக்கும், கிராமப்புற சிறுவர்களுக்கும் இந்த நிகழ்ச்சியின் போது சொல்லி கொடுக்கிறார்.

நமது இளம் வீரர்கள் நவீனமான தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ள அவருடைய பயிற்சி மிகவும் உதவும். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோதே பயிற்சி நிறுவனம், இந்தோ–ஜெர்மன் நிறுவனமான சீமென்ஸ் காமெசா ஆகியவை செய்துள்ளன.


Next Story