‘அர்ஜென்டினா அணிக்காக கோப்பையை வென்று கொடுத்து விட்டு விடைபெற விரும்புகிறேன்’ மெஸ்சி சொல்கிறார்


‘அர்ஜென்டினா அணிக்காக கோப்பையை வென்று கொடுத்து விட்டு விடைபெற விரும்புகிறேன்’ மெஸ்சி சொல்கிறார்
x
தினத்தந்தி 1 Jun 2019 10:00 PM GMT (Updated: 1 Jun 2019 9:00 PM GMT)

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் வருகிற 14–ந் தேதி முதல் ஜூலை 7–ந் தேதி வரை நடக்கிறது.

பியூனஸ்அயர்ஸ்,

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் வருகிற 14–ந் தேதி முதல் ஜூலை 7–ந் தேதி வரை நடக்கிறது. 2 முறை உலக சாம்பியனான அர்ஜென்டினா அணி 1993–ம் ஆண்டு கோபா அமெரிக்கா போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றது. அதன் பிறகு அந்த அணி பெரிய போட்டிகளில் கோப்பையை வென்றதில்லை. லயோனல் மெஸ்சி தலைமையில் அர்ஜென்டினா அணி 2014–ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் 2–வது இடம் பெற்றது. கோபா அமெரிக்கா போட்டியில் மெஸ்சி அங்கம் வகித்தும் அர்ஜென்டினா அணி 2015, 2016–ம் ஆண்டுகளில் 2–வது இடமே பெற்றது.

கோபா அமெரிக்கா போட்டிக்காக அர்ஜென்டினா அணி பியூனஸ் அயர்சில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி அளித்த ஒரு பேட்டியில், ‘அர்ஜென்டினா அணிக்காக பெரிய பட்டத்தை வென்று கொடுத்து விட்டு விடைபெற விரும்புகிறேன். அதற்காக எனது ஆட்டத்தை உயர்த்துவதுடன் அந்த இலக்கை எட்ட மீண்டும் முயற்சிப்பேன். வீழ்ச்சியை சந்தித்தாலும் அதில் இருந்து மீண்டு வந்து நமது கனவை எட்ட போராடுவது தான் வாழ்க்கை. தோல்வியின் வலியை சமாளிக்க எனக்கு குடும்ப வாழ்க்கை நிறைய கற்று கொடுத்துள்ளது. முன்பெல்லாம் நான் தோல்வியை சந்தித்து விட்டு வீடு திரும்பினால் டெலிவி‌ஷன் பார்க்கமாட்டேன். சாப்பிட விரும்பமாட்டேன். எனது மகன் பிறந்ததில் இருந்து எனது முன்னுரிமைகள் மாறி விட்டது. தற்போது தோல்வி கண்டு வீடு திரும்பினால் எனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதுடன் தோல்வியை மறந்து விடுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.


Next Story