பிரபல கால்பந்து வீரர் நெய்மார் மீது செக்ஸ் புகார்


பிரபல கால்பந்து வீரர் நெய்மார் மீது செக்ஸ் புகார்
x
தினத்தந்தி 2 Jun 2019 9:30 PM GMT (Updated: 2 Jun 2019 8:29 PM GMT)

பிரேசிலை சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் நெய்மார் தன்னை கற்பழித்து விட்டதாக அந்த நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் செக்ஸ் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சாவ் பாலோ,

பிரேசிலை சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் நெய்மார் தன்னை கற்பழித்து விட்டதாக அந்த நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் செக்ஸ் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சிக்கலில் நெய்மார்

பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மார். தேசிய அணியை தவிர்த்து பிரான்சில் உள்ள பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் கிளப்புக்காகவும் விளையாடி கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார். 27 வயதான நெய்மார் வருகிற 14–ந்தேதி பிரேசிலில் தொடங்க உள்ள கோபா அமெரிக்கா கால்பந்து போட்டிக்காக தன்னை தயார்படுத்திக் கொண்டு இருக்கிறார்.

இந்த நிலையில் நெய்மார் செக்ஸ் புகாரில் சிக்கி இருக்கிறார். அவர் மீது பிரேசில் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் புகார் கொடுத்துள்ளார். சாவ்போலா நகரில் உள்ள போலீசில் அவர் அளித்த அந்த புகாரில், ‘சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் எனக்கும் நெய்மாருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் செல்போனில் அடிக்கடி தகவல்களை பரிமாறிக்கொண்டோம். என்னை சந்திக்க விருப்பம் தெரிவித்த அவர் விமான டிக்கெட் வாங்கிக் கொடுத்து பிரேசிலில் இருந்து பிரான்சுக்கு வரவழைத்தார். கடந்த மாதம் 15–ந்தேதி அவரை பாரீசில் உள்ள ஓட்டலில் சந்தித்தேன். அப்போது அவர் போதையில் இருந்தது போல் தெரிந்தது. பேசிக்கொண்டிருந்த போது உணர்ச்சிவசப்பட்டு திடீரென கட்டிப்பிடித்தார். பிறகு ஆவேசமடைந்த நெய்மார் விருப்பத்திற்கு மாறாக பலவந்தப்படுத்தி என்னை கற்பழித்து விட்டார். இதனால் நான் அதிர்ச்சிக்குள்ளானேன். வெளிநாட்டில் புகார் கொடுக்க பயமாக இருந்ததால் பிரேசிலுக்கு திரும்பிய பிறகு புகார் அளித்துள்ளேன். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். ஆனால் அந்த பெண்ணின் பெயர், விவரம் ஏதும் வெளியிடப்படவில்லை.

தவறு செய்யவில்லை

நெய்மார் மீதான சர்ச்சை கால்பந்து வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை நெய்மார் திட்டவட்டமாக மறுத்துள்ளார். அவரது சார்பில் அவரது தந்தை சான்டோஸ் அளித்த பேட்டியில், ‘எனது மகன் நெய்மார் எந்த தவறும் செய்யவில்லை. நெய்மாரும், அந்த பெண்ணும் குறிப்பிட்ட நாளில் சந்தித்து பேசியது உண்மை தான். அதன் பிறகு அவரை மீண்டும் பார்க்க நெய்மார் விரும்பவில்லை. நெய்மாரிடம் இருந்து பணம் பறிக்க அந்த பெண் சிலரது துணையுடன் முயற்சித்தார். அது நடக்காததால் இப்போது பொய் புகார் கொடுத்துள்ளார். பல வி‌ஷயங்களில் எனது மகன் மீது குற்றச்சாட்டுகள் வருகின்றன. ஆனால் அவர் எப்படிப்பட்டவர் என்பது எனக்கு தெரியும். அவரது புகழுக்கு களங்கம் கற்பிக்க இந்த மாதிரி புகார் சொல்கிறார்கள்’ என்றார்.

தேவைப்பட்டால் அந்த பெண், நெய்மாருடன் ‘வாட்ஸ்அப்’பில் பேசிய உரையாடல்களை வெளியிடுவோம் என்றும், சட்டபூர்வ நடவடிக்கைக்காக தங்களிடம் உள்ள ஆதாரங்களை தங்களது வழக்கறிஞரிடம் கொடுத்துள்ளதாகவும் சான்டோஸ் கூறினார்.


Next Story