கற்பழிப்பு புகார்: கால்பந்து வீரர் நெய்மாரிடம் போலீஸ் விசாரணை


கற்பழிப்பு புகார்: கால்பந்து வீரர் நெய்மாரிடம் போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 7 Jun 2019 10:40 PM GMT (Updated: 7 Jun 2019 10:40 PM GMT)

கற்பழிப்பு புகார் தொடர்பாக, கால்பந்து வீரர் நெய்மாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

ரியோடி ஜெனீரோ,

பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மார், 14-ந்தேதி தொடங்க இருக்கும் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டிக்கு தயாராகி வந்த நிலையில், கத்தாருக்கு எதிரான நட்புறவு ஆட்டத்தில் களம் இறங்கிய போது வலது கணுக்காலில் காயமடைந்தார். காயத்தன்மை பெரியதாக இருப்பதால் கோபா அமெரிக்க தொடரில் இருந்து விலகிவிட்டார்.

நெய்மார் மீது பிரேசிலைச் சேர்ந்த நஜிலா டிரின்டேட் என்ற 26 வயதான மாடல் அழகி கடந்த வாரம் கற்பழிப்பு குற்றச்சாட்டை சுமத்தினார். நெய்மாருடன் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டதாகவும், அவரின் அழைப்பின் பேரில் நட்சத்திர ஓட்டலில் சந்தித்த போது ஆக்ரோஷமாக நடந்து கொண்ட நெய்மார் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகவும் போலீசில் புகார் கொடுத்திருந்தார். ஆனால் அவருடன் பழக்கம் இருந்தது உண்மை, மற்றபடி தன் மீதான குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று நெய்மார் மறுத்தார். தன்னிடம் இருந்து பணம் பறிக்கவே இந்த மாதிரி நாடகம் ஆடுவதாகவும் நெய்மார் கூறினார்.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நெய்மார் நேற்று முன்தினம் ரியோ டி ஜெனீரோவில் உள்ள போலீஸ் நிலைய தலைமையகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அவரிடம் 2 மணி நேரம் விசாரணை நடந்தது. காயத்தால் நடக்க முடியாமல் அவதிப்பட்ட நெய்மார் வீல்சேரில் அமர்ந்தபடி வந்து தன் மீது தவறில்லை என்று எடுத்து கூறினார். இருப்பினும் இந்த விவகாரத்தில் நெய்மாருக்கு நிச்சயம் சிக்கல் ஏற்படும் என்றே தெரிகிறது. அவருடன் ஒப்பந்தம் செய்த சில விளம்பர நிறுவனங்கள் அதை தொடரலாமா? வேண்டாமா? என்று யோசித்து வருகின்றன.

Next Story