கால்பந்து

‘தமிழக வீரர்கள் கால்பந்து ஆட்டத்தில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்’ - ஜெர்மனி பயிற்சியாளர் மெல்பம் பேட்டி + "||" + 'Tamilnadu players show more interest in football' - Germany coach Melpam interview

‘தமிழக வீரர்கள் கால்பந்து ஆட்டத்தில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்’ - ஜெர்மனி பயிற்சியாளர் மெல்பம் பேட்டி

‘தமிழக வீரர்கள் கால்பந்து ஆட்டத்தில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்’ - ஜெர்மனி பயிற்சியாளர் மெல்பம் பேட்டி
தமிழகத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கால்பந்து விளையாட்டை கற்றுக்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவதாக ஜெர்மனி பெண் பயிற்சியாளர் மெல்பம் கூறினார்.
சென்னை,

சென்னையில் உள்ள ஜெர்மனி நாட்டு துணைத்தூதரகம் மற்றும் ஜெர்மனி கலாசார மையம் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள இளம் வீரர், வீராங்கனைகளுக்கு 3 நாட்கள் சிறப்பு கால்பந்து பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. முதல் நாளில் எஸ்.டி.ஏ.டி. மாணவ-மாணவிகள் பயிற்சி பெற்றனர்.


2-வது நாளான நேற்று பயிற்சி முகாம் சென்னை சேத்துப்பட்டில் உள்ள மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி மைதானத்தில் நடந்தது. முதலில் 15 பள்ளி கால்பந்து பயிற்சியாளர்களுக்கு ஜெர்மனி நாட்டின் பெண் கால்பந்து பயிற்சியாளர் வில்ட்ரட் மெல்பம் பல்வேறு தொழில்நுட்பங்களை கற்றுக்கொடுத்தார். அதைத் தொடர்ந்து 60 தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கால்பந்து வித்தைகளை, நுணுக்கங்களை மெல்பம் சொலிக்கொடுத்து ஊக்கப்படுத்தினார்.

51 வயதான மெல்பம், ஜெர்மனியில் புகழ்பெற்ற ‘பன்டெஸ்லிகா’ கிளப் கால்பந்து போட்டிகளில் விளையாடியவர். 2007-ம் ஆண்டில் இருந்து பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். அங்குள்ள மாகாணம் அளவிலான ஜூனியர் அணி ஒன்றுக்கும் பயிற்சியாளராக இருக்கிறார். தனது அனுபவம் குறித்து அவர் கூறியதாவது:-

தமிழக வீரர், வீராங்கனைகள் கால்பந்து விளையாட்டை ரொம்பவும் உற்சாகமாக கற்றுக்கொள்கிறார்கள். தங்களது ஆட்டத்திறனை மேம்படுத்துவதிலும், தவறு செய்தாலும் அதை திருத்திக்கொள்வதிலும் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். எனக்கு அவர்களுக்கு பயிற்சி அளிப்பது மிகவும் திருப்தி அளிக்கிறது. கால்பந்து போட்டியை பொறுத்தவரை உற்சாகமாக, அதை சவாலாக எடுத்துக் கொண்டு ஆடவேண்டும். பயிற்சியில் ஒருவருக்கொருவர் நன்கு பழகி அதில் இருந்து நிறைய நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். அதன் பிறகே தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். எங்கள் நாட்டில் (ஜெர்மனி) ஆண்கள், பெண்கள் என பாகுபாடின்றி ஒன்றாகத் தான் பயிற்சி அளிப்போம். இவ்வாறு சேர்ந்து பயிற்சி மேற்கொள்ளும்போது பெண்களுக்கு கூடுதல் உத்வேகம் கிடைக்கிறது. ஆண்களிடம் இருந்து கால்பந்து தொடர்பான பல நல்ல விஷயங்களை அறிந்து கொள்ள முடிகிறது. இதே போல் இங்கும் இருந்தால் நன்றாக இருக்கும்.

கால்பந்தில் திறமையாக உள்ளவர்களை அடையாளம் கண்டு அவர்களை மேம்படுத்த வேண்டும் என்பதே எனது நோக்கம். அடுத்து கொழும்பு, டெல்லிக்கு சென்று இதே போல் பயிற்சி அளிக்க இருக்கிறேன். அதன் பிறகு ஜெர்மனிக்கு சென்று விட்டு அங்கிருந்து காம்பியாவுக்கு செல்ல உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.


ஆசிரியரின் தேர்வுகள்...