பிரேசில், அர்ஜென்டினா உள்பட 12 அணிகள் பங்கேற்கும் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி இன்று தொடக்கம்


பிரேசில், அர்ஜென்டினா உள்பட 12 அணிகள் பங்கேற்கும் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 13 Jun 2019 10:15 PM GMT (Updated: 13 Jun 2019 8:51 PM GMT)

பிரேசில், அர்ஜென்டினா உள்பட 12 அணிகள் பங்கேற்கும் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் இன்று தொடங்குகிறது.

சாவ் பாவ்லோ,

புகழ்பெற்ற கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி, தென்அமெரிக்க கண்டத்து அணிகளுக்காக நடத்தப்படுவது ஆகும். இதன்படி 46-வது கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் பிரேசிலில் இன்று தொடங்கி அடுத்த மாதம் (ஜூலை) 7-ந்தேதி வரை நடக்கிறது. இதில் 10 தென்அமெரிக்க கண்டத்து அணிகளோடு ஆசிய கண்டத்தை சேர்ந்த ஜப்பான், கத்தார் ஆகிய அணிகள் சிறப்பு அழைப்பின் பேரில் கலந்து கொள்கின்றன.

பங்கேற்கும் 12 அணிகள் 3 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் பிரேசில், பொலிவியா, வெனிசுலா, பெரு, ‘பி’ பிரிவில் அர்ஜென்டினா, கொலம்பியா, பராகுவே, கத்தார், ‘சி’ பிரிவில் 15 முறை சாம்பியனான உருகுவே, ஈகுவடார், ஜப்பான், நடப்பு சாம்பியன் சிலி ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று நிறைவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்குள் நுழையும். அத்துடன் 3-வது இடத்தை பெறும் சிறந்த 2 அணிகளும் கால்இறுதிக்கு தகுதி பெறும்.

மெஸ்சி சாதிப்பாரா?

8 முறை சாம்பியனான பிரேசில் அணியில் முன்னணி வீரர் நெய்மார் காயத்தால் விலகி விட்டார். இருப்பினும் பிலிப் லூயிஸ், பிலிப் காட்டினோ, டேனி ஆல்வ்ஸ், வில்லியன், தியாகோ சில்வா உள்ளிட்டோர் அணிக்கு வலு சேர்க்கிறார்கள். 14 முறை சாம்பியனான அர்ஜென்டினா அணியில் நட்சத்திர லயோனல் மெஸ்சி மீது எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதுவரை சொந்த அணிக்காக பெரிய அளவிலான கோப்பையை வென்றுத்தராத அவர் இந்த முறை அந்த சோகத்துக்கு விடைகொடுக்க தீவிரம் காட்டுவார்.

முதல் நாளான இன்று சாவ் பாவ்லோ நகரில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் போட்டியை நடத்தும் பிரேசில் அணி, பொலிவியாவை சந்திக்கிறது. உள்ளூர் நேரடிப்படி இந்த ஆட்டம் இரவு 9.30 மணிக்கு தொடங்குகிறது. இந்திய நேரப்படி இந்த ஆட்டத்தை மறுநாள் காலை 6 மணிக்கு பார்க்கலாம்.

Next Story