கோபா அமெரிக்கா கால்பந்து: உருகுவே அணி வெற்றி


கோபா அமெரிக்கா கால்பந்து: உருகுவே அணி வெற்றி
x
தினத்தந்தி 17 Jun 2019 10:58 PM GMT (Updated: 17 Jun 2019 10:58 PM GMT)

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் உருகுவே அணி 4-0 என்ற கோல் கணக்கில் ஈகுவடாரை எளிதில் தோற்கடித்தது.

ரியோடிஜெனீரோ,

46-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த 10 அணிகளோடு ஆசியாவை சேர்ந்த கத்தார், ஜப்பான் அணிகள் சிறப்பு அழைப்பின் பேரில் கலந்து கொண்டுள்ளன. 12 அணிகளும் 3 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன.

இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த ‘பி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் பராகுவே-கத்தார் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பராகுவே அணிக்கு 4-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதனை பயன்படுத்தி அந்த அணி வீரர் ஆஸ்கர் கார்டோசா கோல் அடித்தார். 56-வது நிமிடத்தில் பராகுவே அணி வீரர் டெர்லிஸ் கொனாலெஸ் கோல் போட்டார். இதனால் பராகுவே அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

கத்தார் அணியினர் பதில் கோல் திருப்ப கடும் முனைப்புடன் செயல்பட்டனர். இதன்பலனாக 68-வது நிமிடத்தில் கத்தார் அணி வீரர் அலி பதில் கோல் திருப்பினார். 77-வது நிமிடத்தில் கத்தார் அணி மீண்டும் ஒரு கோல் அடித்தது. அந்த அணி வீரர் போலெம் கோக்ஹி இந்த கோலை திணித்தார். பரபரப்பான இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் (டிரா) முடிந்தது.

‘சி’ பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் 15 முறை சாம்பியனான உருகுவே அணி, ஈகுவடார் அணியை எதிர்கொண்டது. இதில் உருகுவே அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. 6-வது நிமிடத்தில் உருகுவே அணி வீரர் நிகோலஸ் லோடிரோ முதல் கோல் அடித்தார். முன்னதாக ஈகுவடார் அணி வீரர் ஜோஸ் குயின்டெரோ முரட்டு ஆட்டம் காரணமாக நடுவரால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் ஈகுவடார் அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டியதானது.

உருகுவே அணி வீரர்கள் எடிசன் கவானி 33-வது நிமிடத்திலும், லூயிஸ் சுவாரஸ் 44-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இதனால் முதல் பாதியில் உருகுவே அணி 3-0 என்ற கோல் கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது. 78-வது நிமிடத்தில் ஈகுவடார் அணி வீரர் அர்டுரோ மினா சுய கோல் போட்டார். கடைசி வரை போராடியும் ஈகுவடார் அணியால் பதில் கோல் திருப்ப முடியவில்லை. முடிவில் உருகுவே அணி 4-0 என்ற கோல் கணக்கில் ஈகுவடாரை எளிதில் வீழ்த்தி வெற்றியுடன் போட்டியை தொடங்கியது. கோபா அமெரிக்கா போட்டியில் 1967-ம் ஆண்டுக்கு பிறகு உருகுவே அணி பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுவாகும்.


Next Story