கோபா அமெரிக்கா கால்பந்து: உருகுவே–ஜப்பான் ஆட்டம் ‘டிரா’ பெனால்டி வாய்ப்பு வழங்கியதில் சர்ச்சை


கோபா அமெரிக்கா கால்பந்து: உருகுவே–ஜப்பான் ஆட்டம் ‘டிரா’ பெனால்டி வாய்ப்பு வழங்கியதில் சர்ச்சை
x
தினத்தந்தி 21 Jun 2019 10:45 PM GMT (Updated: 21 Jun 2019 9:31 PM GMT)

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் உருகுவே–ஜப்பான் இடையிலான ஆட்டம் டிரா ஆனது.

போர்டோ அலெக்ரே, 

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் உருகுவே–ஜப்பான் இடையிலான ஆட்டம் டிரா ஆனது.

கால்பந்து போட்டி

46–வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டித் தொடர் பிரேசிலின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் தற்போது லீக் சுற்றில் மோதி வருகின்றன. லீக் சுற்று முடிவில் 8 அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை போர்டோ அலெக்ரே நகரில் நடந்த 11–வது லீக் ஆட்டத்தில் 15 முறை சாம்பியனான உருகுவே அணி, ஜப்பானை (சி பிரிவு) எதிர்கொண்டது. இளம் வீரர்களை உள்ளடக்கிய ஜப்பான் அணி அனுபவம் வாய்ந்த உருகுவேவுக்கு எல்லா வகையிலும் ஈடுகொடுத்து ஆடியதால் ஆட்டம் விறுவிறுப்பாக நகர்ந்தது. 25–வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் கோஜி மியோஷி, எதிரணியின் தடுப்பாட்டக்காரர்களை ஏமாற்றி அருமையாக கோல் அடித்தார்.

பெனால்டி வழங்கியதால் சர்ச்சை

பதிலடி கொடுக்க போராடிய உருகுவேவுக்கு 32–வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிட்டியது. கோல் பகுதியில் வைத்து உருகுவே நட்சத்திர வீரர் எடின்சன் கவானி பறந்து வந்த பந்தை அடிக்க முற்பட்ட போது, அவரது காலில் ஜப்பான் வீரர் நோமிச்சி உடா லேசாக மிதித்து விட்டார். இதையடுத்து கள நடுவர், வீடியோ நடுவர்கள் உதவியுடன் (வி.ஏ.ஆர்.) டி.வி. ரீப்ளேயை போட்டு ஆலோசித்தார். இதன் முடிவில் உருகுவேவுக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கினார். பெனால்டி கொடுக்கும் அளவுக்கு வேண்டுமென்றே மிதிக்கவில்லை என்று ஜப்பான் வீரர்கள் வாதிட்ட போதிலும் நடுவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த சர்ச்சைக்கு மத்தியில் பெனால்டி வாய்ப்பை உருகுவே வீரர் லூயிஸ் சுவாரஸ் எளிதில் கோலாக்கினார். இதனால் முதல் பாதி ஆட்டம் 1–1 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது.

டிராவில் முடிந்தது

பிற்பாதியின் 47–வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் நகஜிமாவை கோல் பகுதியில் உருகுவேயின் ஜோஸ் ஜிமென்ஸ் காலால் தடுத்து கீழே விழ வைத்தார். இதற்கு ஜப்பான் வீரர்கள் பெனால்டி கேட்ட போது, நடுவர் வி.ஏ.ஆர். நுட்பத்தின்படி ஆய்வு செய்து பிறகு நிராகரித்து விட்டார். இது ஜப்பான் வீரர்களை மிகுந்த அதிருப்திக்குள்ளாக்கியது.

இந்த பரபரப்பான சூழலில் 59–வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் மியோஷி மீண்டும் கோல் போட்டு அசத்தினார். ஆனால் அவர்களின் மகிழ்ச்சி அதிக நேரம் நிலைக்கவில்லை. உருகுவேயின் ஜோஸ் ஜிமென்ஸ் 66–வது நிமிடத்தில் தலையால் முட்டி பதில் கோல் திருப்பி ஆட்டத்தை மீண்டும் சமனுக்கு கொண்டு வந்தார். சுவாரசின் சில அருமையான ஷாட்டுகளை ஜப்பான் கோல் கீப்பர் கவாஷிமா தடுத்து நிறுத்த, இந்த ஆட்டம் 2–2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இந்த ஆட்டத்தில் வி.ஏ.ஆர். தொழில்நுட்பத்தின்படி நடுவர்களின் தீர்ப்பு ஒருதலைபட்சமாக இருந்தது என்று சமூக வலைதளத்தில் ரசிகர்கள் சாடியுள்ளனர்.

ஒரு வெற்றி, ஒரு டிரா என்று 4 புள்ளியுடன் உள்ள உருகுவே அணி கடைசி லீக்கில் நடப்பு சாம்பியன் சிலியை நாளை மறுதினம் சந்திக்கிறது.


Next Story