கால்பந்து

கோபா அமெரிக்கா கால்பந்து: கால்இறுதியில் உருகுவே + "||" + Copa America Football: Uruguay in the quarter-finals

கோபா அமெரிக்கா கால்பந்து: கால்இறுதியில் உருகுவே

கோபா அமெரிக்கா கால்பந்து: கால்இறுதியில் உருகுவே
கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் உருகுவே அணி 1-0 என்ற கோல் கணக்கில் சிலியை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியது.
ரியோடிஜெனீரோ,

12 அணிகள் இடையிலான 46-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசிலில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த ‘சி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் 15 முறை சாம்பியனான உருகுவே அணி, நடப்பு சாம்பியன் சிலியை எதிர்கொண்டது.


உருகுவே அணியினரின் தாக்குதல் ஆட்டத்தை சிலி அணியினர் அருமையாக தடுத்து நிறுத்தினார்கள். இரு அணிகளும் கோல் அடிக்க பலமுறை முயற்சி செய்தாலும் முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை. 82-வது நிமிடத்தில் உருகுவே அணி கோல் அடித்தது. அந்த அணியின் ரோட்ரிக்ஸ் கோல் எல்லையை நோக்கி அடித்த பந்தை சக வீரர் எடின்சன் கவானி தலையால் முட்டி கோலுக்குள் திணித்தார். பதில் கோல் திருப்ப சிலி அணி தீவிர முயற்சி மேற்கொண்டாலும் அதற்கு பலன் கிடைக்கவில்லை. முடிவில் உருகுவே அணி 1-0 என்ற கோல் கணக்கில் சிலியை வீழ்த்தியது. உருகுவே அணி 2 வெற்றி, ஒரு டிராவுடன் (7 புள்ளிகள்) தனது பிரிவில் முதலிடத்தையும், சிலி அணி 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் (6 புள்ளிகள்) 2-வது இடத்தையும் பிடித்து கால்இறுதிக்கு முன்னேறியது.

இதே பிரிவில் நடந்த ஜப்பான்-ஈகுவடார் அணிகள் இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இதனால் இரு அணிகளும் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தன.

லீக் சுற்று முடிவில் பிரேசில், வெனிசுலா, பெரு (ஏ பிரிவு), கொலம்பியா, அர்ஜென்டினா, பராகுவே (பி), உருகுவே, சிலி (சி) ஆகிய அணிகள் கால்இறுதிக்குள் நுழைந்தன. பொலிவியா, கத்தார், ஜப்பான், ஈகுவடார் ஆகிய அணிகள் வெளியேறின.