பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஐரோப்பிய அணிகள் ஆதிக்கம்


பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஐரோப்பிய அணிகள் ஆதிக்கம்
x
தினத்தந்தி 26 Jun 2019 11:39 PM GMT (Updated: 26 Jun 2019 11:39 PM GMT)

பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த 7 அணிகள் கால் இறுதிக்கு முன்னேறியுள்ளன.

பாரீஸ்,

24 அணிகள் இடையிலான 8-வது பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் (ரவுண்ட் 16) இத்தாலி-சீனா அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 15-வது நிமிடத்தில் இத்தாலி வீராங்கனை வாலென்டினா ஜியாசின்டி கோல் அடித்தார். 49-வது நிமிடத்தில் இத்தாலி அணியின் மாற்று வீராங்கனை அரோரா கேலி கோல் போட்டார். சீனாவின் கட்டுப்பாட்டில் பந்து அதிக நேரம் வலம் வந்தாலும் அந்த அணியால் கடைசி வரை பதில் கோல் திருப்ப முடியவில்லை. முடிவில் இத்தாலி அணி 2-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தது.

மற்றொரு ஆட்டத்தில் நெதர்லாந்து-ஜப்பான் அணிகள் சந்தித்தன. 17-வது நிமிடத்தில் நெதர்லாந்து வீராங்கனை மார்டென்சும், 43-வது நிமிடத்தில் ஜப்பானின் ஹாஸ்கவாவும் கோல் அடித்தனர். இதனால் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தன. ஆட்டம் டிராவில் முடியும் என்று எதிர்பார்த்த நிலையில் கடைசி நிமிடத்தில் நெதர்லாந்து அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை மார்டென்ஸ் கோலாக மாற்ற, நெதர்லாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை சாய்த்து கால்இறுதியை எட்டியது.

இந்த பெண்கள் உலக கோப்பை போட்டியில் ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், நார்வே, இங்கிலாந்து, நெதர்லாந்து, சுவீடன் ஆகிய 7 அணிகள் கால்இறுதிக்கு முன்னேறி இருக்கின்றன.

பெண்கள் உலக கோப்பை தொடர் ஒன்றில் ஐரோப்பிய அணிகளின் ஆதிக்கம் அதிகமாக இருப்பது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்பு 2015-ம் ஆண்டில் 3 ஐரோப்பிய அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெற்றதே சிறந்த செயல்பாடாக இருந்தது.


Next Story