கோபா அமெரிக்கா கால்பந்து: பிரேசில் அணி அரைஇறுதிக்கு தகுதி


கோபா அமெரிக்கா கால்பந்து: பிரேசில் அணி அரைஇறுதிக்கு தகுதி
x
தினத்தந்தி 28 Jun 2019 10:32 PM GMT (Updated: 28 Jun 2019 10:32 PM GMT)

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் பிரேசில் அணி பெனால்டி ஷூட்டில் 4-3 என்ற கோல் கணக்கில் பராகுவேயை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது.

போர்டோ அலெக்ரே,

46-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசிலில் நடந்து வருகிறது. இதில் இந்திய நேரப்படி நேற்று காலை நடந்த கால்இறுதி ஆட்டத்தில் பிரேசில்-பராகுவே அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பந்து பிரேசில் அணியின் கட்டுப்பாட்டில் அதிக நேரம் வலம் வந்தது. அந்த அணியின் முன்கள வீரர்கள் கோல் அடிக்க கிடைத்த நல்ல வாய்ப்புகளை தவற விட்டனர்.

58-வது நிமிடத்தில் முரட்டு ஆட்டம் காரணமாக பராகுவே அணி வீரர் பாபியன் பால்புனா நடுவரால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் பராகுவே அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது. வழக்கமான நேரம் மற்றும் கூடுதல் நேரம் முடிவில் இரு அணிகள் கோல் எதுவும் அடிக்காததால் 0-0 என்ற கணக்கில் சமநிலை நிலவியது.

இதனால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. பிரேசில் அணியில் வில்லியன், மர்குயின்ஹோஸ், பிலிப் காட்டினோ, கேப்ரியல் ஜீசஸ் ஆகியோர் தங்களது பெனால்டி வாய்ப்பை கோலாக்கினர். 4-வது பெனால்டி வாய்ப்பை பிரேசில் வீரர் பிர்மினோ வீணடித்தார்.

பராகுவே தரப்பில் கோமெஸ் அடித்த முதல் பெனால்டி வாய்ப்பை பிரேசில் அணியின் கோல் கீப்பர் அலிஸ்சன் அருமையாக தடுத்தார். இதே போல் கோன்சாலிஸ் கடைசி பெனால்டி வாய்ப்பில் பந்தை வெளியில் அடித்து சொதப்பினார். பெனால்டி ஷூட்-அவுட் முடிவில் பிரேசில் அணி 4-3 என்ற கோல் கணக்கில் பராகுவே அணியை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது.

பிரேசிலின் வெற்றியின் அந்த அணியின் கோல் கீப்பர் அலிஸ்சன் முக்கிய பங்கு வகித்தார். கடைசி நிமிடத்தில் பராகுவே வீரர் ஜூயன் எஸ்கோபர் அடித்த ஷாட்டை தடுத்ததோடு, பெனால்டி ஷூட்-அவுட்டிலும் எதிரணியின் ஒரு வாய்ப்பை சூப்பராக முறியடித்தார். இதன் மூலம் 2011, 2015-ம் ஆண்டுகளில் கால்இறுதி ஆட்டங்களில் பெனால்டி ஷூட்டில் பராகுவேயிடம் கண்ட தோல்விக்கு பிரேசில் பழிதீர்த்துக் கொண்டது.


Next Story