கோபா அமெரிக்கா கால்பந்து: அர்ஜென்டினா, சிலி அணிகள் அரைஇறுதிக்கு முன்னேற்றம்


கோபா அமெரிக்கா கால்பந்து: அர்ஜென்டினா, சிலி அணிகள் அரைஇறுதிக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 29 Jun 2019 11:30 PM GMT (Updated: 29 Jun 2019 11:30 PM GMT)

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா, சிலி அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின.

ரியோடிஜெனீரோ,

46-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசிலில் வருகிறது. இதில் இந்திய நேரப்படி நேற்று காலை நடந்த கால் இறுதி ஆட்டம் ஒன்றில் 14 முறை சாம்பியனான அர்ஜென்டினா அணி, வெனிசுலாவை எதிர்கொண்டது.

லீக் சுற்று ஆட்டங்களில் சொதப்பிய அர்ஜென்டினா அணி இந்த ஆட்டத்தில் எழுச்சியுடன் ஆடியது. 10-வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் மார்டினெஸ், சக வீரர் செர்ஜி அகுரோ கடத்தி கொடுத்த பந்தை கோலாக்கினார்.

74-வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணி 2-வது கோல் அடித்தது. அந்த அணி வீரர் ஜியோவானி லோ செல்சோ இந்த கோலை அடித்தார். வெனிசுலா அணியால் கடைசி வரை பதில் கோல் திருப்ப முடியவில்லை. முடிவில் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெனிசுலாவை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது. இந்திய நேரப்படி 3-ந் தேதி அதிகாலை 6 மணிக்கு நடைபெறும் அரைஇறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி, பிரேசிலை சந்திக்கிறது.

மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சிலி அணி, கொலம்பியாவுடன் மோதியது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் வழக்கமான நேரம் மற்றும் கூடுதல் நேரம் முடிவில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காமல் சமநிலை (0-0) வகித்தன.

இதனால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் இரு அணிகளும் தங்களது முதல் 4 பெனால்டி வாய்ப்புகளை கோலாக்கினார்கள். பரபரப்பான சூழ்நிலையில் கொலம்பியா அணியின் 5-வது மற்றும் கடைசி பெனால்டி வாய்ப்பை அந்த அணி வீரர் வில்லியம் டெசில்லோ கோலாக்க தவறினார். சிலி அணியின் கடைசி பெனால்டி வாய்ப்பை அந்த அணி வீரர் அலெக்சிஸ் சாஞ்சஸ் கோலாக்கி அணிக்கு திரில் வெற்றியை தேடிக்கொடுத்தார். பெனால்டி ஷூட்-அவுட் முடிவில் சிலி அணி 5-4 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி அரைஇறுதியை எட்டியது.

Next Story