கோபா அமெரிக்கா கால்பந்து சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்? - பிரேசில்-பெரு அணிகள் இன்று பலப்பரீட்சை


கோபா அமெரிக்கா கால்பந்து சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்? - பிரேசில்-பெரு அணிகள் இன்று பலப்பரீட்சை
x
தினத்தந்தி 6 July 2019 11:41 PM GMT (Updated: 6 July 2019 11:41 PM GMT)

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் பிரேசில்-பெரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ரியோடிஜெனீரோ,

46-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசிலில் நடந்து வருகிறது. 12 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்வது யார்? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி ரியோடிஜெனீரோவில் உள்ள மரகானா ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) உள்ளூர் நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. இதில் 8 முறை சாம்பியனான பிரேசில் அணி, 2 தடவை பட்டம் வென்றுள்ள பெரு அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தை இந்திய நேரப்படி நாளை அதிகாலை 12.30 மணிக்கு பார்க்கலாம்.

பிரேசில் அணி கால்இறுதியில் பெனால்டி ஷூட்டில் பராகுவேயையும், அரைஇறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவையும் சாய்த்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. பெரு அணி கால்இறுதியில் பெனால்டி ஷூட்டில் 15 முறை சாம்பியனான உருகுவேயையும், அரைஇறுதியில் 3-0 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் சிலியையும் சாய்த்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

பிரேசில் அணி இந்த போட்டி தொடரில் இதுவரை ஒரு கோல் கூட வாங்கவில்லை. அந்த அளவுக்கு அந்த அணியின் தடுப்பு ஆட்டம் கச்சிதமாக இருக்கிறது. நட்சத்திர வீரர் நெய்மார் இல்லாத நிலையிலும் பிரேசில் அணியின் தாக்குதல் ஆட்டம் சிறப்பாகவே விளங்கி வருகிறது. காட்டினோ, ராபர்டோ பிர்மினோ, கேப்ரியல் ஜீசஸ் ஆகியோர் எதிரணிக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் தாக்குதல் ஆட்டத்தில் அபாரமாக செயல்பட்டு வருகிறார்கள். நடுகள வீரர் வில்லியன் காயம் காரணமாக இந்த ஆட்டத்தில் விளையாட முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

லீக் சுற்று ஆட்டத்தில் பிரேசில் அணி 5-0 என்ற கோல் கணக்கில் பெருவை வீழ்த்தி இருந்தது. அந்த வெற்றியை தொடர பிரேசில் அணி முனைப்பு காட்டும். அதேநேரத்தில் லீக் ஆட்டத்தில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க பெரு அணி தீவிரமாக முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 27 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் பிரேசில் அணி 18 முறையும், பெரு அணி 3 முறையும் வெற்றி பெற்றன. 6 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. ‘இந்த போட்டி தொடரில் ஒரு கோல் கூட விட்டுக்கொடுக்காமல் முடிக்க வேண்டும் என்பது எங்கள் குறிக்கோள்களில் ஒன்றாகும்’ என்று பிரேசில் அணியில் நடுகள வீரர் கேஸ்மிரோ தெரிவித்தார்.


Next Story