கால்பந்து

உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் இந்தியா-ஓமன் அணிகள் இன்று மோதல் + "||" + India-Oman clash in World Cup Football qualifier today

உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் இந்தியா-ஓமன் அணிகள் இன்று மோதல்

உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் இந்தியா-ஓமன் அணிகள் இன்று மோதல்
உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் இந்தியா-ஓமன் அணிகள் கவுகாத்தியில் இன்று மோதுகின்றன.
கவுகாத்தி,

32 அணிகள் பங்கேற்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி 2022-ம் ஆண்டு கத்தார் நாட்டில் நடக்கிறது. இந்த போட்டிக்கான தகுதி சுற்று பல்வேறு நாடுகளில் நடைபெறுகிறது.

இதில் ஆசிய கண்டத்திற்கான தகுதி சுற்றின் 2-வது ரவுண்டில் இடம் பெற்றுள்ள 40 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணிகளும், 2-வது இடத்தை பெறும் சிறந்த 4 அணிகளும் என்று மொத்தம் 12 அணிகள் 3-வது சுற்றுக்கு முன்னேறும். 2023-ம் ஆண்டு நடக்கும் ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கும் இது தகுதி சுற்றாக அமைகிறது.


இதில் ‘இ’ பிரிவில் இந்திய அணி இடம் வகிக்கிறது. இந்திய அணியுடன் ஓமன், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், கத்தார் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

இந்த நிலையில் சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக்கில் ஓமனை இன்று (வியாழக்கிழமை) கவுகாத்தியில் உள்ள இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் சந்திக்கிறது. உலக தரவரிசையில் ஓமன் 87-வது இடத்திலும், இந்தியா 103-வது இடத்திலும் உள்ளன.

இந்திய அணியின் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் கூறுகையில், ‘எங்களது பிரிவில் கத்தாரும், ஓமனும் வலுவான அணிகள். இவ்விரு அணிகளையும் நாங்கள் அதிகாரபூர்வமான (உலக கோப்பை தகுதி சுற்று) போட்டிகளில் வென்றதில்லை. அதனால் இந்த ஆட்டம் எளிதாக இருக்காது. ஆனால் கவுகாத்தி மைதானம் எங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நம்புகிறோம். போட்டிக்கு சிறப்பான முறையில் தயாராகி உள்ளோம்’ என்றார்.

இந்திய அணிக்கு திடீர் பின்னடைவாக 18 வயதான அமர்ஜித்சிங் கியாம் காயத்தால் விலகியிருக்கிறார். இவர் 17 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கால்பந்து போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர் ஆவார். இந்திய அணி 111 கோல்கள் அடித்த அனுபவ சாலியான சுனில் சேத்ரியையே அதிகமாக நம்பி இருக்கிறது. 

சுனில் சேத்ரி கூறுகையில், ‘2018-ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்றில் நாங்கள் ஓமனிடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தோம். இந்த முறை நிச்சயம் சிறப்பாக செயல்படுவோம் என்று நம்புகிறேன். இது அதிகமான இளம் வீரர்களை கொண்ட அணி. அதனால் மூத்த வீரரான என்னிடம் இருந்து எத்தகைய எதிர்பார்ப்பு இருக்கும் என்பதை அறிவேன். அவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் வகையில் செயல்பட வேண்டியது முக்கியம்’ என்றார்.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்3 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.