ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை அணியிடம் கேரளா தோல்வி


ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை அணியிடம் கேரளா தோல்வி
x
தினத்தந்தி 24 Oct 2019 11:50 PM GMT (Updated: 24 Oct 2019 11:50 PM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், மும்பை அணியிடம் கேரளா தோல்வியடைந்தது.

கொச்சி,

6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில் கொச்சி நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 5-வது லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி, மும்பை சிட்டியை எதிர்கொண்டது. தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தாவை சாய்த்த உற்சாகத்துடன் களம் இறங்கிய கேரளா அணியால், மும்பையின் தடுப்பு அரணை உடைக்க முடியவில்லை. 45-வது நிமிடத்தில் கேரள வீரர் ஜெய்ரோ ரோட்ரிகஸ் தலையால் முட்டி கோல்கம்பம் நோக்கி அடித்த பந்தை சக வீரர் முகமடோவ் ஜினிங் சாதுர்யமாக திருப்பியிருந்தால் கோலாகியிருக்கும். ஆனால் வாய்ப்பை வீணடித்து விட்டார்.

இதன் பின்னர் இலக்கை நோக்கி கேரளா அடித்த சில ஷாட்டுகளை மும்பை கோல் கீப்பர் அம்ரிந்தர் சிங் தடுத்து நிறுத்தினார். ஆட்டம் டிராவை நோக்கி செல்வது போல் தோன்றிய நிலையில் 82-வது நிமிடத்தில் மும்பை வீரர் அமினே செர்மிட்டி கோல் அடித்து உள்ளூர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். அதுவே வெற்றி கோலாகவும் மாறியது. முடிவில் மும்பை சிட்டி 1-0 என்ற கோல் கணக்கில் கேரளாவை வீழ்த்தியது. கொல்கத்தாவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் லீக் ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா -ஐதராபாத் எப்.சி. அணிகள் மோதுகின்றன.

Next Story