ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி வெற்றி கணக்கை தொடங்குமா? - மும்பையுடன் இன்று மோதல்


ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி வெற்றி கணக்கை தொடங்குமா? - மும்பையுடன் இன்று மோதல்
x
தினத்தந்தி 26 Oct 2019 10:52 PM GMT (Updated: 26 Oct 2019 10:52 PM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-மும்பை சிட்டி எப்.சி. அணிகள் மோதுகின்றன.

சென்னை, 

6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடைபெறும் 8-வது லீக் ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி.அணி, மும்பை சிட்டி எப்.சி. அணியை சந்திக்கிறது.

சென்னையின் எப்.சி. அணி கோவாவில் நடந்த தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 0-3 என்ற கோல் கணக்கில் எப்.சி.கோவா அணியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது. கடந்த ஆண்டு கடைசி இடத்துக்கு தள்ளப்பட்ட சென்னையின் எப்.சி. அணி இந்த சீசனில் பெரிய அளவில் வீரர்களை மாற்றம் செய்து களம் கண்ட போதிலும் முதல் ஆட்டத்தில் ஏமாற்றமே மிஞ்சியது. மும்பை சிட்டி அணி கொச்சியில் நடந்த தனது முதல் லீக் ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்சை வீழ்த்தி வெற்றியுடன் போட்டியை தொடங்கியது.

இந்த சீசனில் சென்னையின் எப்.சி. அணி உள்ளூரில் ஆடும் முதல் ஆட்டம் இதுவாகும். முந்தைய தோல்வியை மறந்து சென்னையின் எப்.சி. அணி தீபாவளி பரிசாக வெற்றி கணக்கை தொடங்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். அதே நேரத்தில் மும்பை சிட்டி அணி தனது வெற்றியை தொடர தீவிரம் காட்டும். எனவே இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்த போட்டி குறித்து சென்னையின் எப்.சி. அணியின் தலைமை பயிற்சியாளர் ஜான் கிரிகோரி (இங்கிலாந்து) நேற்று அளித்த பேட்டியில், ‘ஐ.எஸ்.எல். போட்டியின் மூலம் இந்திய கால்பந்து எல்லா வகையிலும் முன்னேற்றம் கண்டு இருக்கிறது. ஆனால் நடுவர்களின் செயல்பாட்டில் எந்தவித ஏற்றமும் ஏற்பட்டு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. கடந்த லீக் ஆட்டத்தில் எங்கள் அணி வீரர் டிராகோஸ் பிர்ட்டிலிஸ்கு எதிரணி கோல் எல்லைப்பகுதியில் விதிமுறைக்கு மாறாக தடுக்கப்பட்டார். அதற்கு பெனால்டி வாய்ப்பை நடுவர் வழங்கி இருக்க வேண்டும். ஆனால் நடுவர் அவ்வாறு தீர்ப்பளிக்கவில்லை. நடுவரின் தவறான முடிவு எங்களுக்கு பாதகமாக அமைந்தது. நடுவர்களின் செயல்பாடுகளில் உள்ள அதிருப்தி குறித்து புகார் தெரிவித்தாலும் கடும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுவதில்லை. மும்பைக்கு எதிரான ஆட்டத்துக்கான எங்கள் அணியில் ஒரு சில வீரர்கள் மாற்றம் செய்யப்படுவார்கள். உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் நடைபெறும் இந்த போட்டி எங்களுக்கு முக்கியமானதாகும். எங்கள் அணி வீரர்கள் ரசிகர்களை கவரும் வகையில் விளையாட விரும்புகிறார்கள். ஐ.எஸ்.எல். போட்டியில் நீங்கள் விரைவாக முடிவுகள் எடுக்க வேண்டும். புதிய வீரர்கள் விரைவாக முடிவு எடுக்க வேண்டியது அவசியமானதாகும்’ என்று தெரிவித்தார்.

சென்னை அணியின் நடுகள வீரர் டிராகோஸ் பிர்ட்டிலிஸ்கு (ருமேனியா) கருத்து தெரிவிக்கையில், ‘முதல் போட்டியின் முடிவு நாங்கள் எதிர்பார்த்தபடி அமையவில்லை. உள்ளூர் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறோம். எனது திறமை மீது நம்பிக்கை இருக்கிறது. இந்த போட்டி தொடரில் என்னால் சிறந்த வீரராக விளங்க முடியும் என்று நம்புகிறேன்’ என்றார்.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

Next Story