ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி முதல் வெற்றி பெறுமா? - கொல்கத்தாவுடன் இன்று மோதல்


ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி முதல் வெற்றி பெறுமா? - கொல்கத்தாவுடன் இன்று மோதல்
x
தினத்தந்தி 29 Oct 2019 10:58 PM GMT (Updated: 29 Oct 2019 10:58 PM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

சென்னை, 

6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) இரவு நடைபெறும் 11-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி தனது முதல் ஆட்டத்தில் 0-3 என்ற கோல் கணக்கில் எப்.சி.கோவாவிடம் தோல்வி அடைந்தது. 2-வது ஆட்டத்தில் கோல் இன்றி மும்பை சிட்டி எப்.சி.யுடன் டிரா கண்டது. இதேபோல் முன்னாள் சாம்பியனான அட்லெடிகோ டி கொல்கத்தா அணி தனது முதல் ஆட்டத்தில் 1-2 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்சிடம் பணிந்தது. முந்தைய லீக் ஆட்டத்தில் 5-0 என்ற கோல் கணக்கில் ஐதராபாத் எப்.சி. அணியை பந்தாடியது. அந்த நம்பிக்கையுடன் கொல்கத்தா அணி இந்த ஆட்டத்தில் களம் காணும்.

உள்ளூரில் 2-வது ஆட்டத்தில் விளையாடும் சென்னையின் எப்.சி. அணி முதல் வெற்றியை ருசிக்க முனைப்பு காட்டும். அதேநேரத்தில் முந்தைய போட்டியை போல் இந்த ஆட்டத்திலும் அதிரடியை தொடர கொல்கத்தா அணி முயலும். எனவே இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

போட்டி குறித்து சென்னையின் எப்.சி. அணியின் தலைமை பயிற்சியாளர் ஜான் கிரிகோரி கூறுகையில், ‘மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் நாங்கள் கோல் மட்டும் தான் போடவில்லை. மற்றபடி எங்கள் ஆட்டம் சிறப்பாக இருந்தது. முந்தைய லீக் ஆட்டத்தில் எங்களது தடுப்பு ஆட்டம் நேர்த்தியாக இருந்தது. அந்த ஆட்ட திறனை கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்திலும் தொடருவோம். அதிரடி தொடக்கம் காணும் கொல்கத்தா போன்ற அணிக்கு எதிராக சரியான ஆட்ட யுக்தியை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமானதாகும்’ என்றார்.

இதற்கிடையே, ஜாம்ஷெட்பூரில் நேற்றிரவு நடந்த 10-வது லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஐதராபாத் எப்.சி.-யை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.

Next Story