ஐ.எஸ்.எல். கால்பந்து: கேரளாவை வீழ்த்தியது ஐதராபாத்


ஐ.எஸ்.எல். கால்பந்து: கேரளாவை வீழ்த்தியது ஐதராபாத்
x
தினத்தந்தி 2 Nov 2019 10:39 PM GMT (Updated: 2 Nov 2019 10:39 PM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், கேரளா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் ஐதராபாத் அணி வீழ்த்தியது.

ஐ.எஸ்.எல். கால்பந்து: கேரளாவை வீழ்த்தியது ஐதராபாத்

6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு ஐதராபாத்தில் நடந்த 14-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி. அணி 2-1 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்சை வீழ்த்தி முதலாவது வெற்றியை பதிவு செய்தது. முதல் பாதியில் ஐதராபாத் அணி 0-1 என்ற கோல் கணக்கில் பின்தங்கிய நிலையில் மார்கோ ஸ்டான்கோவிச் (54-வது நிமிடம்), மார்செலினோ (81-வது நிமிடம்) கோல் போட்டு வெற்றியை தேடித்தந்தனர். இன்றைய லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி.-பெங்களூரு எப்.சி. (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.

உலக கோப்பை ரக்பி: தென்ஆப்பிரிக்க அணி ‘சாம்பியன்’

உலக கோப்பை ரக்பி போட்டி ஜப்பானில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதிஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா-இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய தென்ஆப்பிரிக்க அணி 32-12 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஏற்கனவே அந்த அணி 1995, 2007-ம் ஆண்டுகளில் பட்டத்தை வென்று இருந்தது.

‘சூதாட்டக்காரர்கள் மத்தியில் தான் விளையாடினேன்’ -அக்தர்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் டெலிவிஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‘நான் ஒருபோதும் பாகிஸ்தானை ஏமாற்ற வேண்டும் என்று நினைத்ததும் கிடையாது. சூதாட்டத்தில் ஈடுபட்டதும் இல்லை. ஆனால் என்னை சுற்றி மேட்ச் பிக்சர்கள் (போட்டியின் முடிவை நிர்ணயிப்பவர்கள்) இருந்தனர். நான் 21 வீரர்களுக்கு எதிராக விளையாடினேன். எதிரணி வீரர்கள் 11 பேர், எங்கள் அணி வீரர்கள் 10 பேருக்கு எதிராகவே நான் விளையாடியதாக உணருகிறேன். மேட்ச் பிக்சிங் செய்வது யார்? என்பது யாருக்கு தெரியும். நிறைய சூதாட்டங்கள் நடந்துள்ளன. முகமது ஆசிப் எந்தெந்த ஆட்டங்களை பிக்சிங் செய்தார் என்பது குறித்து என்னிடம் கூறியிருக்கிறார். முகமது அமிர் மற்றும் முகமது ஆசிப்பிடம் இது தவறு என்று புரிய வைக்க முயற்சித்தேன். அவர்கள் தங்களது திறமையை வீணடித்து விட்டனர். அற்ப பணத்துக்காக அவர்கள் தங்களை விற்று விட்டனர்’ என்றார்.

பகல்-இரவு டெஸ்டுக்கு 3 வினாடியில் சம்மதம் தெரிவித்த கோலி

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவர் சவுரவ் கங்குலி அளித்த ஒரு பேட்டியில், ‘ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அடிலெய்டில் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட அழைத்த போது இந்திய வீரர்கள் ஏன் மறுத்தனர், அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து எனக்கு தெரியாது. வங்காளதேச தொடருக்கான அணித் தேர்வுக்கு முன்பாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை சந்தித்து பேசினேன். அப்போது அவரிடம் நாம் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆடுவது அவசியம் என்று கூறினேன். பகல்-இரவு டெஸ்டில் விளையாடலாம் என்று வெறும் 3 வினாடிகளில் கோலி பதில் அளித்தார். பகல்-இரவு டெஸ்ட் போட்டி நடத்தும் போது ரசிகர்கள் அதிக அளவில் வருவார்கள் என்பதையும் கோலி உணர்ந்துள்ளார்’ என்றார்.

உலக மல்யுத்தத்தில் பூஜாவுக்கு வெள்ளிப்பதக்கம்

23 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரியில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 53 கிலோ எடைப்பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பூஜா கெலாட் 0-2 என்ற கணக்கில் முன்னாள் சாம்பியன் ஹருனா ஒகுனோவிடம் (ஜப்பான்) தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைந்தார்.

Next Story