ஐ.எஸ்.எல். கால்பந்து: ஜாம்ஷெட்பூரை வீழ்த்தி கொல்கத்தா 3-வது வெற்றி


ஐ.எஸ்.எல். கால்பந்து: ஜாம்ஷெட்பூரை வீழ்த்தி கொல்கத்தா 3-வது வெற்றி
x
தினத்தந்தி 10 Nov 2019 12:06 AM GMT (Updated: 10 Nov 2019 12:06 AM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், ஜாம்ஷெட்பூரை வீழ்த்தி கொல்கத்தா 3-வது வெற்றியை பதிவு செய்தது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் சென்னை-கொல்கத்தா அணிகள் மோத உள்ளன.

கொல்கத்தா,

10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கொல்கத்தாவில் நேற்றிரவு அரங்கேறிய 19-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தா அணி, ஜாம்ஷெட்பூர் எப்.சி.யுடன் மோதியது. முதல் பாதியில் கோல் ஏதும் விழாத நிலையில் பிற்பாதியில் கொல்கத்தா ஆதிக்கம் செலுத்தியது. கொல்கத்தா வீரர் ராய் கிருஷ்ணா கோல் நோக்கி முன்னேறிய போது, எதிரணி வீரர்களால் கீழே இடறி விடப்பட்டதால் 57-வது மற்றும் 71-வது நிமிடங்களில் பெனால்டி வாய்ப்பு பெற்றதுடன், இரண்டையும் கோலாக்கி உள்ளூர் ரசிகர்களை குதூகலப்படுத்தினார். இதே போல் 85-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை ஜாம்ஷெட்பூர் வீரர் கேஸ்டல் கோலாக்கினார். இதன் பின்னர் கடைசி நிமிடத்தில் கொல்கத்தா வீரர் எடு கார்சிசா அட்டகாசமாக ஒரு கோல் அடித்தார். முடிவில் கொல்கத்தா அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூரை சாய்த்தது. கொல்கத்தா அணி 3 வெற்றி, ஒரு தோல்வி என்று 9 புள்ளியுடன் பட்டியலில் முதலிடத்திற்கு உயர்ந்துள்ளது.

அதே சமயம் 4-வது லீக்கில் ஆடிய ஜாம்ஷெட்பூர் அணிக்கு இது முதலாவது தோல்வியாகும். முந்தைய 3 ஆட்டங்களில் 2-ல் வெற்றியும், ஒன்றில் ‘டிரா’வும் கண்டிருந்தது.

பெங்களூருவில் இன்றிரவு 7.30 மணிக்கு நடக்கும் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு எப்.சி., முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி.யை சந்திக்கிறது. இந்த சீசனில் இவ்விரு அணிகளும் இன்னும் வெற்றிக்கணக்கை தொடங்கவில்லை. பெங்களூரு அணி இதுவரை ஆடிய 3 ஆட்டங்களையும் டிரா செய்துள்ளது. சென்னை அணி ஒரு டிரா, 2 தோல்வி என்று ஒரு புள்ளியுடன் கடைசி இடத்தில் இருக்கிறது.


Next Story