ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி: டென்மார்க், சுவிட்சர்லாந்து அணிகள் தகுதி


ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி: டென்மார்க், சுவிட்சர்லாந்து அணிகள் தகுதி
x
தினத்தந்தி 19 Nov 2019 11:00 PM GMT (Updated: 19 Nov 2019 11:00 PM GMT)

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிக்கு டென்மார்க், சுவிட்சர்லாந்து அணிகள் தகுதிபெற்றன.

டப்ளின்,

16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி அடுத்த ஆண்டு (2020) ஜூன், ஜூலை மாதங்களில் முதல்முறையாக மொத்தம் 12 நாடுகளில் நடத்தப்படுகிறது. இந்த போட்டிக்கான தகுதி சுற்று தற்போது பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது.

அயர்லாந்து தலைநகர் டப்ளினில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் அயர்லாந்து-டென்மார்க் (டி பிரிவு) அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இதேபிரிவில் ஜிப்ரால்டரில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து அணி 6-1 என்ற கோல் கணக்கில் ஜிப்ரால்டர் அணியை தோற்கடித்தது. ‘டி’ பிரிவு லீக் சுற்று முடிவில் சுவிட்சர்லாந்து 17 புள்ளிகளுடன் முதலிடமும் (5 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வி), டென்மார்க் 16 புள்ளிகளுடன் (4 வெற்றி, 4 டிரா) 2-வது இடமும் பிடித்து ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றன. ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில் மொத்தம் 24 அணிகள் கலந்து கொள்கின்றன. இதுவரை 19 அணிகள் தகுதி பெற்று இருக்கின்றன.

Next Story