தெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்திய பெண்கள் கால்பந்து அணி தங்கம் வென்றது


தெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்திய பெண்கள் கால்பந்து அணி தங்கம் வென்றது
x
தினத்தந்தி 9 Dec 2019 11:40 PM GMT (Updated: 9 Dec 2019 11:40 PM GMT)

தெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்திய பெண்கள் கால்பந்து அணி மீண்டும் தங்கப்பதக்கம் வென்றது. குத்துச்சண்டையில் இந்தியா 6 தங்கப்பதக்கங்களை கைப்பற்றியது.

போக்ஹரா,

7 நாடுகள் பங்கேற்றுள்ள 13-வது தெற்காசிய விளையாட்டு போட்டி நேபாளத்தில் உள்ள காத்மண்டு மற்றும் போக்ஹராவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா-நேபாள அணிகள் பலப்பரீட்சை நடத்தின. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கியது. இந்திய அணி தரப்பில் பாலாதேவி 18-வது மற்றும் 56-வது நிமிடத்தில் கோல் அடித்தார். தெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்திய பெண்கள் அணி தொடர்ச்சியாக 3-வது முறையாக தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது.

குத்துச்சண்டை போட்டியில் நேற்று இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. இதில் ஆண்களுக்கான 49 கிலோ உடல் எடைப்பிரிவில் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் வினோத் தன்வார் 5-0 என்ற கணக்கில் பூடான் வீரர் தாஷி வாங்டியை ஊதி தள்ளி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். 56 கிலோ பிரிவில் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் சச்சின் 5-0 என்ற கணக்கில் வங்காளதேச வீரர் ராபினை தோற்கடித்து மகுடம் சூடினார். 91 கிலோ பிரிவில் இந்திய வீரர் கவுரவ் சவுகான் 4-1 என்ற கணக்கில் பாகிஸ்தானின் சனாலுல்லாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றார். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீரர் மனிஷ் கவுசிக் (64 கிலோ) இறுதிப்போட்டியில் 0-5 என்ற கணக்கில் நேபாள வீரர் பூபேந்திர தபாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கம் பெற்றார். 75 கிலோ பிரிவில் இறுதிப்போட்டியில் தேசிய சாம்பியனான இந்திய வீரர் அங்கித் கதனா 5-0 என்ற கணக்கில் இலங்கையின் தினேஷ் மதுரங்காவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார்.






 
                              தங்கப்பதக்கம் வென்ற கலைவாணி

பெண்களுக்கான 48 கிலோ உடல் எடைப்பிரிவில் இளம் வீராங்கனை கலைவாணி 3-2 என்ற கணக்கில் நேபாள வீராங்கனை லலிதாவை சாய்த்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். கலைவாணி தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார். 60 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை பர்வீன் 3-2 என்ற கணக்கில் நேபாளத்தை சேர்ந்த சுனார் சங்கீதாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கபளகரம் செய்தார். குத்துச்சண்டையில் நேற்று இந்தியாவுக்கு 6 தங்கம், ஒரு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

நேற்று ஒரேநாளில் இந்தியா 27 தங்கம் உள்பட 42 பதக்கத்தை அள்ளியது. நேற்றைய போட்டிகள் முடிவில் இந்தியா 159 தங்கம், 91 வெள்ளி, 44 வெண்கலம் என மொத்தம் 294 பதக்கங்கள் வென்று முதலிடத்தில் நீடிக்கிறது. நேபாளம் 49 தங்கம், 54 வெள்ளி, 92 வெண்கலம் என 195 பதக்கங்களுடன் 2-வது இடத்தில் இருக்கிறது.


Next Story