கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: கேரளாவை வீழ்த்தி சென்னை 2-வது வெற்றி + "||" + ISLFootball: Chennai beat Kerala team

ஐ.எஸ்.எல். கால்பந்து: கேரளாவை வீழ்த்தி சென்னை 2-வது வெற்றி

ஐ.எஸ்.எல். கால்பந்து: கேரளாவை வீழ்த்தி சென்னை 2-வது வெற்றி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்சை சாய்த்து சென்னை அணி 2-வது வெற்றியை பதிவு செய்தது.
சென்னை,

10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு சென்னை நேரு ஸ்டேடியத்தில் அரங்கேறிய 42-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, கேரளா பிளாஸ்டர்சை எதிர்கொண்டது.


பரபரப்பான இந்த ஆட்டத்தில் 4-வது நிமிடத்தில் சென்னை வீரர் ஸ்கெம்ப்ரி கோல் அடித்து உள்ளூர் ரசிகர்களை உற்சாகத்தில் மிதக்க வைத்தார். 15-வது நிமிடத்தில் கேரளா கேப்டன் ஒக்பீச்சே ‘பிரீகிக்’ வாய்ப்பில் கோல் போட்டு ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்தார்.

26-வது நிமிடத்தில் சென்னை அணி வீரர் வல்ஸ்கிஸ் அடித்த கோல் சர்ச்சையாக வெடித்தது. அதாவது அந்த சமயத்தில் சென்னை வீரர் ‘பவுல்’ செய்ததால் கேரளா அணியினர் அது குறித்து நடுவருடன் பேசிக் கொண்டிருந்தனர். இந்த சில வினாடி குழப்பத்திற்கு இடையே பந்தை கடத்திச் சென்று சென்னை வீரர் வல்ஸ்கிஸ் கோலாக்கி விட்டார். ‘பவுல்’ விஷயத்தில் நடுவர் ஒரு முடிவுக்கு வராத நிலையில் கோல் அடித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கேரள வீரர்கள் நடுவரிடம் இடைவிடாது வாக்குவாதம் செய்தனர். களத்தில் ஆக்ரோஷமாக வரிந்து கட்டி நின்றனர். சில நிமிடங்களுக்கு பிறகு அது கோல் இல்லை என்று நடுவர் அறிவித்தார். இதனால் அதிர்ச்சிக்குள்ளான சென்னை வீரர்கள் நடுவரை முற்றுகையிட்டனர். சென்னை அணியின் பயிற்சியாளர், உதவியாளர்கள் ஆப்-சைடு நடுவரிடம் முறையிட்டனர். ஆனால் எதையும் நடுவர் கண்டுகொள்ளவில்லை. ஆட்டம் தொடர்ந்து நடந்தது.

இந்த சர்ச்சை முடிந்த உடனே சென்னை வீரர் வல்ஸ்கிஸ் தட்டிக்கொடுத்த பந்தை சக வீரர் சேங்தே (30-வது நிமிடம்) லாவகமாக கோல் அடித்து சுடச்சுட பதிலடி கொடுத்தார். உள்ளூர் ரசிகர்களின் ஆர்ப்பரிப்பால் அரங்கமே அதிர்ந்தது. தொடர்ந்து 40-வது நிமிடத்தில் சென்னை வீரர் வல்ஸ்கிஸ் மேலும் ஒரு கோலை போட்டு, கேரளாவை நிலைகுலையச் செய்தார். இதனால் முதல்பாதியில் 3-1 என்ற கோல் கணக்கில் சென்னை அணி வலுவான முன்னிலை பெற்றது.

பிற்பாதியிலும் இரு அணியினரும் கோல் போடுவதில் தீவிரம் காட்டினர். 52-வது நிமிடத்தில் சென்னை வீரர் சேங்தே மேலும் ஒரு கோல் அடித்திருக்க வேண்டியது. தனி வீரராக எதிரணியின் கோல் எல்லையை நெருங்கிய அவர், கேரளா வீரர்கள் தன்னை சுற்றியதும் ஓங்கி உதைத்தார். ஆனால் அது மயிரிழையில் கம்பத்திற்கு வெளியே சென்று ஏமாற்றி விட்டது. பந்து அதிகமான நேரம் கேரளா வசமே (63 சதவீதம்) சுற்றிக் கொண்டிருந்தாலும் சென்னை தடுப்பு அரணை அவர்களால் உடைக்க முடியவில்லை. கடைசி நிமிடத்தில் சென்னை வீரர் எலி சபியா 2-வது முறையாக மஞ்சள் அட்டை பெற்றதால் அது சிவப்பு அட்டையாக காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். அடுத்த ஆட்டத்தில் அவரால் விளையாட முடியாது.

முடிவில் சென்னையின் எப்.சி. அணி 3-1 என்ற கோல் கணக்கில் கேரளாவை தோற்கடித்தது. 8-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணிக்கு இது 2-வது வெற்றியாகும். கேரளா சந்தித்த 4-வது தோல்வி இதுவாகும். ஐதராபாத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் லீக் ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி.-அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.


தொடர்புடைய செய்திகள்

1. 20 ஓவர் கிரிக்கெட்: வங்காளதேசத்தை வீழ்த்தியது பாகிஸ்தான்
20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தியது.
2. ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவா அணி 8வது வெற்றி
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் கேரளா அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோவா அணி வெற்றிபெற்றது.
3. சீனாவில் இருந்து திரும்பியவர்கள்: கேரளாவில் 80 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்
கேரளாவில் சீனாவில் இருந்து திரும்பிய 80 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
4. ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி 5-வது வெற்றி
10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த 65-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, ஜாம்ஷெட்பூர் எப்.சி.யை சந்தித்தது.
5. ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூரு 7-வது வெற்றி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் ஒடிசா அணிக்கு எதிரான ஆட்டத்தில், பெங்களூரு அணி தனது 7-வது வெற்றியை பதிவு செய்தது.