ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி அரைஇறுதிக்கு தகுதி


ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி அரைஇறுதிக்கு தகுதி
x
தினத்தந்தி 21 Feb 2020 11:12 PM GMT (Updated: 22 Feb 2020 12:46 AM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி. அணி 1-0 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டியை வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.

மும்பை,

10 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை நெருங்கிவிட்ட இந்த போட்டியில் ஏற்கனவே கோவா, கொல்கத்தா, பெங்களூரு அணிகள் அரைஇறுதியை எட்டி விட்டன. எஞ்சிய ஒரு இடத்தை பிடிப்பதில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி., மும்பை சிட்டி அணிகள் இடையே கடும் போட்டி நிலவியது.

இந்த நிலையில் மும்பையில் நேற்றிரவு அரங்கேறிய 87-வது லீக் ஆட்டத்தில் சென்னை- மும்பை அணிகள் பலப்பரீட்சையில் இறங்கின. வாழ்வா-சாவா? மோதல் என்பதால் இரு அணி வீரர்களும் கோல் அடிப்பதில் தீவிரம் காட்டின. ஆனால் முதல் பாதியில் கோல் ஏதும் விழவில்லை.

பிற்பாதியில் மேலும் ஆக்ரோஷமாக வரிந்து கட்டினர். 54-வது நிமிடத்தில் சென்னை வீரர் சாங்தே கோல் நோக்கி தனி வீரராக பந்துடன் முன்னேறிய போது, மும்பை வீரர் சவுரவ் தாஸ் அவரை காலால் மிதித்து இடறி விட்டார். இதையடுத்து சவுரவ் தாஸ் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் எஞ்சிய நேரம் 10 வீரர்களுடன் ஆட வேண்டிய நெருக்கடிக்கு மும்பை அணி தள்ளப்பட்டது.

76-வது நிமிடத்தில் சென்னை அணிக்கு கோல் வாய்ப்பு மயிரிழையில் நழுவியது. அதாவது சென்னை வீரர் ஜெர்மன்பிரீத் சிங் இலக்கை நோக்கி துல்லியமாக அடித்த ஷாட்டை எதிரணி கோல் கீப்பர் அம்ரிந்தர்சிங் தனது காலால் பந்தை தடுத்து வெளியே தள்ளினார்.

83-வது நிமிடத்தில் ‘கார்னர்’ பகுதியில் இருந்து ரபெல் கிரிவெல்ரோ தூக்கி உதைத்த பந்தை கோல் கம்பம் அருகில் நின்ற சென்னை கேப்டன் லூசியன் கோயன் அழகாக வலைக்குள் அனுப்பி கோலாக் கினார். அதுவே வெற்றி கோலாகவும் அமைந்தது.

முடிவில் சென்னை அணி 1-0 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டியை வீழ்த்தியது. 17-வது லீக்கில் ஆடிய சென்னை அணி 8 வெற்றி, 4 டிரா, 5 தோல்வி என்று 28 புள்ளிகளுடன் பட்டியலில் 4-வது இடத்துக்கு முன்னேறியதுடன் அரைஇறுதியையும் உறுதி செய்தது. இந்த சீசனில் தொடக்கத்தில் மோசமாக ஆடிய சென்னை அணி புதிய பயிற்சியாளராக ஓவென் கோய்லே வந்த பிறகு எழுச்சி பெற்றது. கடைசி 7 ஆட்டங்களில் 6-ல் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை அணி 7 வெற்றி, 5 டிரா, 6 தோல்வி என்று 26 புள்ளிகளுடன் 5-வது இடத்துக்கு சரிந்தது. இன்றிரவு 7.30 மணிக்கு நடக்கும் லீக்கில் பெங்களூரு எப்.சி.- அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.


Next Story