ஐ.எஸ்.எல். கால்பந்து அரைஇறுதியில் சென்னை-கோவா அணிகள் இன்று பலப்பரீட்சை


ஐ.எஸ்.எல். கால்பந்து அரைஇறுதியில் சென்னை-கோவா அணிகள் இன்று பலப்பரீட்சை
x
தினத்தந்தி 29 Feb 2020 12:14 AM GMT (Updated: 29 Feb 2020 12:14 AM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையில் இன்று நடைபெறும் அரைஇறுதியின் முதலாவது சுற்று ஆட்டத்தில் சென்னை-கோவா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

சென்னை,

10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடரில் லீக் சுற்று முடிவில் எப்.சி.கோவா அணி (12 வெற்றி, 3 டிரா, 3 தோல்வி) புள்ளி பட்டியலில் முதலிடமும், அட்லெடிகோ டி கொல்கத்தா அணி (10 வெற்றி, 4 டிரா, 4 தோல்வி) 2-வது இடமும், நடப்பு சாம்பியன் பெங்களூரு எப்.சி. (8 வெற்றி, 6 டிரா, 4 தோல்வி) 3-வது இடமும், சென்னையின் எப்.சி. (8 வெற்றி, 5 டிரா, 5 தோல்வி) 4-வது இடமும் பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின.

இந்த நிலையில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) இரவு நடைபெறும் அரைஇறுதியின் முதலாவது சுற்று ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான சென்னை அணி, 2 தடவை 2-வது இடம் பிடித்த கோவா அணியை எதிர்கொள்கிறது.

தொடக்கத்தில் திணறிய சென்னை அணி, புதிய பயிற்சியாளராக ஓவன் கொய்லே நியமனம் செய்யப்பட்ட பிறகு எழுச்சி பெற்றது. சென்னை அணி தனது கடைசி 8 லீக் ஆட்டங்களில் தோல்வியே சந்திக்கவில்லை. அதில் 2 ஆட்டத்தில் டிரா செய்ததும் அடங்கும். சென்னை அணியில் வல்ஸ்கிஸ் (13 கோல்), ரபெல் கிரிவெல்லாரோ (7 கோல்) நட்சத்திர வீரர்களாக மின்னுகிறார்கள். உள்ளூர் ரசிகர்களின் முன்னிலையில் ஆடுவது சென்னை அணிக்கு கூடுதல் உத்வேகம் அளிக்கும். கோவா அணி தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்டு வருகிறது. அந்த அணி தனது கடைசி 5 லீக் ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்தது. அந்த அணியின் கோரோமினாஸ் (14 கோல்), ஹூகோ போமோஸ் (11 கோல்) ஆகியோர் கோல் மழை பொழிந்து வருகிறார்கள். இந்த சீசனில் 2 லீக் ஆட்டங்களிலும் கோவா அணி, சென்னையை வீழ்த்தி இருந்தது. இதனால் அந்த அணி நம்பிக்கையுடன் களம் காணும். அதேநேரத்தில் முந்தைய லீக் ஆட்டங்களில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க சென்னை அணி முழு முயற்சி மேற்கொள்ளும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழைய முடியாது. அடுத்து இவ்விரு அணிகளும் அரைஇறுதி 2-வது சுற்று ஆட்டத்தில் மீண்டும் மோதும். இந்த ஆட்டம் கோவாவில் வருகிற 7-ந் தேதி நடக்கிறது. இரு ஆட்டங்கள் முடிவில் அதிக வெற்றி பெறும் அணி இறுதிபோட்டிக்கு தகுதி பெறும். இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றால், கோல் அடிப்படையில் இறுதிப்போட்டி வாய்ப்பு யாருக்கு? என்பது தீர்மானிக்கப்படும்.

போட்டி குறித்து சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஓவன் கொய்லே கூறுகையில் ‘கோவா ஒரு மிகச்சிறந்த அணியாகும். அந்த அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருப்பதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை. அதேசமயம் நாங்களும் நல்ல பார்மில் இருக்கிறோம். வீரர்களிடையே இருக்கும் நம்பிக்கையும், உறுதியும் கோவாவுக்கு எதிரான ஆட்டத்தில் எங்களை வெற்றியை நோக்கி அழைத்து செல்லும் என நம்புகிறேன்’ என்றார்.

Next Story