கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து அரைஇறுதி சுற்றில் சென்னையின் எப்.சி. அபார வெற்றி - கோவா அணியை பந்தாடியது + "||" + ISL Chennai FC play football semi-final Great success - Played the Goa team

ஐ.எஸ்.எல். கால்பந்து அரைஇறுதி சுற்றில் சென்னையின் எப்.சி. அபார வெற்றி - கோவா அணியை பந்தாடியது

ஐ.எஸ்.எல். கால்பந்து அரைஇறுதி சுற்றில் சென்னையின் எப்.சி. அபார வெற்றி - கோவா அணியை பந்தாடியது
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் அரைஇறுதியின் முதலாவது சுற்றில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி 4-1 என்ற கோல கணக்கில் பலம் வாய்ந்த கோவாவை பந்தாடியது.
சென்னை,

6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடித்த எப்.சி. கோவா, அட்லெடிகோ டி கொல்கத்தா, பெங்களூரு எப்.சி, சென்னையின் எப்.சி. ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின.


இந்த நிலையில் சென்னை- கோவா அணிகள் இடையிலான அரைஇறுதியின் முதலாவது சுற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்தது. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழுமியிருந்த ரசிகர்களின் ஆர்ப்பரிப்புக்கு மத்தியில் உற்சாகமாக அடியெடுத்து வைத்த சென்னை அணி வீரர்கள் தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக ஆடினர். சில வாய்ப்புகள் நழுவிப் போன நிலையில் முதல் பாதியில் யாரும் கோல் போடவில்லை.பிற்பாதி ஆட்டத்தில் சென்னை அணியினர் வெறித்தனமாக ஆடினர். 54-வது நிமிடத்தில் ‘பிரிகிக்’ வாய்ப்பில் சென்னை வீரர் ரபெல் கிரிவெல்லாரோ நீண்ட தூரத்தில் இருந்து உதைத்த பந்தை கோல் பகுதியில் நின்ற சக வீரர் லூசியன் கோயன் தலையால் முட்டி வலைக்குள் அனுப்பினார். அரங்கமே மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தது. இதனால் புதுரத்தம் பாய்ச்சியது போல் மேலும் கிளர்ந்தெழுந்த சென்னை அணியினர் அலைஅலையாக எதிரணி கோல் கம்பத்தை முற்றுகையிட்டு மேலும் 3 கோல்களை திணித்தனர்.

அனிருத் தபா (61-வது நிமிடம்), எலி சபியா (77-வது நிமிடம்), சாங்தே (79-வது நிமிடம்) ஆகியோரின் கோல்களால் கோவா அணி நிலைகுலைந்தது. இதன் பிறகு 85-வது நிமிடத்தில் கோவா மாற்று ஆட்டக்காரர் சேவியர் காமா கோல் திருப்பி அந்த அணிக்கு ஆறுதல் அளித்தார்.

முடிவில் சென்னையின் எப்.சி. அணி 4-1 என்ற கோல் கணக்கில் கோவாவை வீழ்த்தியது. இதன் மூலம் லீக் சுற்றில் இரண்டு முறை அடைந்த தோல்விக்கும் சென்னை அணி பழிதீர்த்துக் கொண்டது. இந்த ஆட்டத்தில் காலை இடறி, தள்ளி விடும் மோதல்போக்கு அடிக்கடி நடந்ததை பார்க்க முடிந்தது. சென்னை தரப்பில் 4 வீரர்களும், கோவா தரப்பில் 2 வீரர்களும் மஞ்சள் அட்டை எச்சரிக்கைக்கு உள்ளானார்கள்.

இவ்விரு அணிகளும் அரைஇறுதியின் 2-வது சுற்றில் கோவா நேரு ஸ்டேடியத்தில் வருகிற 7-ந்தேதி மீண்டும் சந்திக்க உள்ளன. அந்த ஆட்டத்தில் சென்னை அணி டிரா செய்தாலே இறுதிப்போட்டிக்குள் நுழைந்து விடலாம். தோற்றாலும் 2 கோல் வித்தியாசத்திற்கு மேல் இல்லாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நடப்பு சாம்பியன் பெங்களூரு எப்.சி.- அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் இடையிலான மற்றொரு அரைஇறுதியின் முதலாவது சுற்று பெங்களூருவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.