ஐ.எஸ்.எல். கால்பந்து: இறுதிப்போட்டியில் சென்னையின் எப்.சி.


ஐ.எஸ்.எல். கால்பந்து: இறுதிப்போட்டியில் சென்னையின் எப்.சி.
x
தினத்தந்தி 8 March 2020 12:06 AM GMT (Updated: 8 March 2020 12:06 AM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி. அணி, கோவாவுக்கு எதிரான 2-வது அரைஇறுதியில் தோற்ற போதிலும் கோல் வித்தியாசம் அடிப்படையில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

கோவா,

6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் சென்னையில் நடந்த எப்.சி. கோவாவுக்கு எதிரான அரைஇறுதியின் முதலாவது சுற்றில் சென்னையின் எப்.சி. அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில் இவ்விரு அணிகளும் அரைஇறுதியின் 2-வது சுற்றில் கோவா நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு சந்தித்தன.

3 கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற நெருக்கடியுடன் களம் புகுந்த கோவா அணியின் வசமே பந்து கணிசமான நேரம் (58 சதவீதம்) சுற்றிக் கொண்டிருந்தது. 10-வது நிமிடத்தில் சென்னை வீரர் லூசியன் கோயனின் மூலம் கோவா சுயகோல் பெற்றது. தொடர்ந்து 21-வது நிமிடத்தில் மோர்டடா பால் கோல் போட்டு கோவாவுக்கு 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுத் தந்தார்.

பிற்பாதியில் சென்னையின் எப்.சி வீரர்கள் பதிலடி கொடுத்தனர். 52-வது நிமிடத்தில் சாங்தேவும், 59-வது நிமிடத்தில் தலையால் முட்டி வல்ஸ்கிசும் கோல் அடித்து அசத்தியதோடு 2-2 என்ற கணக்கில் சமனுக்கு கொண்டு வந்தனர். நடப்பு தொடரில் வல்ஸ்கிஸ் அடித்த 14-வது கோல் இதுவாகும்.

இதன் பின்னர் இறுதி கட்டத்தில் கோவா வீரர்கள் எடு பெடியா (81-வது நிமிடம்), மோர்டடா பால் (84-வது நிமிடம்) கோல் திருப்பி அச்சுறுத்திய போதிலும், சென்னை அணியினர் பாதிப்பு இல்லாமல் பார்த்துக் கொண்டனர். முடிவில் கோவா அணி 4-2 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்.சி.யை வீழ்த்தியது. இதையடுத்து அரைஇறுதி சுற்றில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்ற நிலையில் கோல் எண்ணிக்கை அடிப்படையில் முன்னிலை வகித்த சென்னையின் எப்.சி. (6-5 என்ற கோல் கணக்கில்) இறுதிப்போட்டி அதிர்ஷ்டத்தை தட்டிச் சென்றது. முன்னாள் சாம்பியனான சென்னை அணி இறுதிசுற்றை எட்டுவது இது 3-வது நிகழ்வாகும்.

நடப்பு சாம்பியன் பெங்களூரு எப்.சி.- அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோதும் மற்றொரு அரைஇறுதியின் 2-வது சுற்று இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.


Next Story