கால்பந்து

ஐ.எஸ்.எல். கோப்பையை கையில் ஏந்தியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது தமிழக கால்பந்து வீரர் சூசைராஜ் பெருமிதம் + "||" + IPL Cup Gives pleasure Tamil football player Soosairaj is proud

ஐ.எஸ்.எல். கோப்பையை கையில் ஏந்தியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது தமிழக கால்பந்து வீரர் சூசைராஜ் பெருமிதம்

ஐ.எஸ்.எல். கோப்பையை கையில் ஏந்தியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது தமிழக கால்பந்து வீரர் சூசைராஜ் பெருமிதம்
ஐ.எஸ்.எல். கோப்பையை கையில் ஏந்தியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று அட்லெடிகோ டி கொல்கத்தா அணிக்காக விளையாடிய தமிழக கால்பந்து வீரர் சூசைராஜ் தெரிவித்தார்.
சென்னை,

6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடரில் கோவாவில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் கடந்த சனிக்கிழமை இரவு நடந்த இறுதிப்போட்டியில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணி 3-1 என்ற கோல் முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி. அணியை வீழ்த்தி 3-வது முறையாக கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இறுதிப்போட்டி ரசிகர்கள் அனுமதியின்றி அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.


சாம்பியன் பட்டத்தை வென்ற அட்லெடிகோ டி கொல்கத்தா அணியில் இடம் பிடித்து இருந்த மைக்கேல் சூசைராஜ், ரெஜின் ஆகியோர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். சகோதரர்களான இவர்களது சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரவிபுத்தன்துறை மீனவ கிராமமாகும். இவர்களது குடும்பமே கால்பந்தில் ஊறியது எனலாம். இவர்களது அண்ணன்கள் ஜெகன், ராபின் ஆகியோரும் கால்பந்து விளையாட்டில் அதிக ஈடுபாடு உடையவர்கள். அண்ணன்கள் அனைவரையும் மிஞ்சிய தம்பியாக சூசைராஜ் விளங்கி வருகிறார் என்றால் மிகையாகாது.

2018-19-ம் ஆண்டில் ஐ.எஸ்.எல். போட்டியில் அறிமுகமான சூசைராஜ் ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிக்காக விளையாடி 4 கோல்கள் அடித்தார். இந்த ஆண்டு அட்லெடிகோ டி கொல்கத்தா அணியில் நடுகள வீரராக விளையாடிய சூசைராஜ் 3 கோல்கள் அடித்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இதன் மூலம் ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் அதிக கோல்கள் அடித்த தமிழக வீரர் என்ற பெருமையை தன்வசப்படுத்தி உள்ளார்.

25 வயதான சூசைராஜ், உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்றில் விளையாடும் இந்திய அணியில் அங்கம் வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். அவரது அண்ணன் ரெஜின் பயிற்சி முகாமின் போது கணுக்காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வந்து இந்த சீசனில் கடைசி 7 ஆட்டங்களில் விளையாடி அணிக்கு நல்ல பங்களிப்பை அளித்தார்.

கோப்பையை உச்சி முகர்ந்த மகிழ்ச்சியுடன் சொந்த ஊருக்கு திரும்பி இருக்கும் சூசைராஜ் ‘தினத்தந்தி’க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

எனக்கு ஞாபகம் தெரிந்த வயதில் இருந்தே கால்பந்து விளையாடி வருகிறேன். 13 வயதிலேயே தமிழக ஜூனியர் அணிக்கு கேப்டன் பொறுப்பை வகித்து இருக்கிறேன். படிப்படியாக முன்னேற்றம் கண்டு தொழில்முறை வீரராக உருவெடுத்து இருக்கிறேன். ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி இந்திய வீரர்களுக்கு நல்லதொரு அடித்தளமாகும். வெளிநாட்டு வீரர்களுடன் விளையாடி ஆட்ட நுணுக்கத்தை அறிய வழிவகுப்பதுடன், வீரர்களை வெகுவாகவும் இந்த போட்டி பிரபலப்படுத்துகிறது. இந்த போட்டிக்கான அணிகளில் தமிழக வீரர்கள் சிலர் இடம் பிடித்து இருக்கிறோம். இந்த போட்டியின் மூலம் தமிழகத்தை சேர்ந்த வீரர்களுக்கு தொழில்முறை கால்பந்து வீரர்களாக உருவாக வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டு இருக்கிறது. பலரும் இந்த போட்டியில் விளையாடும் எங்களுடன் பேசி ஆலோசனை கேட்கிறார்கள். இது கால்பந்து வளர்ச்சிக்கு நல்ல அறிகுறியாகும்.

ஐ.எஸ்.எல். இறுதிப்போட்டியில் வென்று கொல்கத்தா அணி கோப்பையை கைப்பற்றியது சிறப்பான தருணமாகும். நான் பல போட்டிகளில் சிறந்த வீரருக்கான கோப்பையை பெற்று இருக்கிறேன். ஆனால் நான் விளையாடிய அணி சாம்பியன் பட்டம் வென்று அதற்கான கோப்பையை கையில் ஏந்தியது இதுவே முதல்முறையாகும். கோப்பையை வென்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எனது சந்தோஷத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ரசிகர்கள் இன்றி வெறிச்சோடிய ஸ்டேடியத்தில் இறுதிபோட்டியை விளையாடியது மிகுந்த ஏமாற்றம் அளித்தது. எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இறுதிப்போட்டியை காண டிக்கெட்டுகள் வாங்கி இருந்தும் போட்டியை பார்க்க முடியாமல் போனது கஷ்டமாக இருந்தது. ரசிகர்கள் இல்லாததால் இறுதிப்போட்டியில் வழக்கமான உற்சாகத்தை காண முடியவில்லை.

சொந்த மாநிலத்தை சேர்ந்த சென்னையின் எப்.சி. அணிக்காக விளையாட முடியவில்லை என்ற வருத்தம் இல்லை. ஏனெனில் தொழில்முறை வீரர்களை பொறுத்தமட்டில் எந்த அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்தாலும் தங்களது முழு திறமையையும் வெளிப்படுத்துவது தான் குறிக்கோளாகும். சென்னை அணிக்காக விளையாட வேண்டும் என்று அதிகம் விரும்புகிறேன். அது வருங்காலத்தில் நடைபெறும் என்று நம்புகிறேன். வெளிநாட்டில் நடைபெறும் கால்பந்து லீக் போட்டியில் ஆட வேண்டும். இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாட வேண்டும் என்பதும் எனது லட்சியமாகும். இதற்காக தொடர்ந்து கடினமாக உழைப்பேன். இவ்வாறு சூசைராஜ் கூறினார்.