கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை இழந்தது இந்தியா + "||" + India lose top spot in ICC Test rankings to Australia

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை இழந்தது இந்தியா

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை இழந்தது இந்தியா
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தை இழந்துள்ளது.
துபாய், 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஆண்டுதோறும் அணிகளின் தரவரிசை பட்டியலில் முந்தைய ஆண்டுகளின் சில முடிவுகளை கழற்றி விட்டு, சமீபத்திய போட்டிகளின் புதிய முடிவுகளை இணைத்து (வருடாந்திர அப்டேட் ரேங்கிங்) புதிய தரவரிசை பட்டியலை வெளியிடுவது வழக்கம். இதன்படி இந்த ஆண்டுக்கான ‘அப்டேட் ரேங்கிங்’கை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது.

இதில் டெஸ்ட் அணிகளின் தரவரிசையில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. இதில் இதுவரை 116 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த இந்திய அணி 2 புள்ளியை இழந்து 114 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. அதே சமயம் 108 புள்ளிகளுடன் 3-வது இடம் வகித்த ஆஸ்திரேலியா கூடுதலாக 8 புள்ளிகளை பெற்று 116 புள்ளிகளுடன் ’நம்பர் ஒன்’ அரியணையில் ஏறியிருக்கிறது.

தற்போதைய கணக்கீட்டில் 2016-17-ம் ஆண்டுக்கான டெஸ்ட் போட்டிகளின் முடிவுகள் நீக்கப்பட்டன. இந்த சீசனில் இந்திய அணி 12 டெஸ்டில் வெற்றிகளை குவித்து ஒன்றில் மட்டுமே தோற்று இருந்தது. அதாவது 5 டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி இருந்தது. இந்த முடிவுகள் நீக்கப்பட்டதால் அது இந்தியாவுக்கு தரவரிசையிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த சமயத்தில் தென்ஆப்பிரிக்கா, இந்தியாவுடன் டெஸ்ட் தொடர்களை பறிகொடுத்த ஆஸ்திரேலியாவுக்கு இந்த முடிவுகள் கணக்கீட்டில் இல்லாதது மீண்டும் ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடிப்பதற்கு உதவியிருக்கிறது. 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து ‘நம்பர் ஒன்’ அந்தஸ்துடன் கம்பீரமாக வலம் வந்த இந்திய அணி, இந்த ‘அப்டேட்’ நடைமுறையின் மூலம் சறுக்கி விட்டது.

ஏற்கனவே 2-வது இடத்தில் இருந்த நியூசிலாந்து அணி மேலும் 5 புள்ளிகளை பெற்று 115 புள்ளிகளுடன் நம்பர் ஒன் இடத்தை நெருங்கியுள்ளது. தென்ஆப்பிரிக்கா 8 புள்ளிகளை தாரைவார்த்து 90 புள்ளிகளுடன் 6-வது இடத்திற்கு சரிந்துள்ளது. 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து தென்ஆப்பிரிக்க அணி 9 டெஸ்டில் விளையாடி 8ல் தோல்வி கண்டிருப்பது, தரநிலையிலும் எதிரொலித்து இருக்கிறது.

20 ஓவர் போட்டி அணிகளின் தரவரிசையில் ஆஸ்திரேலியா 9 புள்ளிகளை கூடுதலாக வசப்படுத்தி 278 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. சர்வதேச 20 ஓவர் போட்டி அணிக்கான தரவரிசை 2011-ம் ஆண்டு அறிமுகம் ஆனது. அதன் பிறகு ஆஸ்திரேலியா முதலிடத்திற்கு முன்னேறி இருப்பது இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் பாகிஸ்தானின் 27 மாத கால ‘நம்பர் ஒன்’ பயணம் முடிவுக்கு வந்து விட்டது. ‘அப்டேட்’ கணக்கீட்டில் 10 புள்ளிகளை இழந்துள்ள பாகிஸ்தான் 260 புள்ளிகளுடன் 4-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. இங்கிலாந்து 2-வது இடத்திலும் (268 புள்ளி), இந்தியா 3-வது இடத்திலும் (266 புள்ளி), தென்ஆப்பிரிக்கா 5-வது இடத்திலும் (258 புள்ளி) உள்ளன.

ஒரு நாள் போட்டி அணிகளின் தரவரிசையில் உலக சாம்பியனான இங்கிலாந்து மேலும் 3 புள்ளிகளை கைப்பற்றி 127 புள்ளிகளுடன் மாற்றமின்றி ‘நம்பர் ஒன்’ இடத்தை வலுப்படுத்தியுள்ளது. இந்தியா 119 புள்ளிகளுடன் 2-வது இடம் வகிக்கிறது. ஒரு நாள் போட்டி தரவரிசையில் முதல் 10 இடங்களில் மாற்றம் ஏதும் இல்லை.

இந்திய அணியை வீழ்த்த வேண்டும் - ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர்

‘டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை அவர்களது சொந்த மண்ணிலேயே வீழ்த்த வேண்டும் என்பதே எங்களது மிகப்பெரிய லட்சியம். இதே போல் அவர்கள் எங்கள் நாட்டிற்கு வருகை தரும் போதும் தோற்கடிக்க வேண்டும். மிக்சிறந்த அணியை வெல்லும் போது மட்டுமே உங்களது திறமையை மதிப்பிட முடியும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் மகுடம் சூடுவதையும் இலக்காக கொண்டுள்ளோம்’.