லாக் டவுனில் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவுகளை வழங்கி வரும் விஜயன்!


லாக் டவுனில் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவுகளை வழங்கி வரும் விஜயன்!
x
தினத்தந்தி 13 May 2020 8:32 AM GMT (Updated: 13 May 2020 8:32 AM GMT)

லாக் டவுனில் உணவின்றி தவிக்கும் ஏழை மக்களுக்கு முன்னாள் கால்பந்து வீரர் விஜயன் உணவுகளை தயார் செய்து வழங்கி வருகிறார்.

திருச்சூர்,

பிரபல கால்பந்து வீரர் ஐ.எம்.விஜயன் கேரளாவில் திருச்சூரில் வறுமையில் தவித்தார். சிறு வயதில் சோடா மற்றும் சிகரெட் உள்ளிட்டவைகளை விற்று வந்தவர். கால்பந்தின் மேல் தீராத ஆசைகொண்ட அவர் அப்போதைய கேரள டி.ஜி.பி எம்.கே.ஜோசப்பின் உதவியால் காவல்துறை அணியில் சேர்ந்து பயிற்சி மேற்கொண்டார். அதன் பின்னர் 1989ம் ஆண்டு இந்திய அணிக்குள் நுழைந்தார். 15 ஆண்டுகள் இந்திய அணிக்காக ஆடியுள்ள அவர், 79 போட்டிகளில் விளையாடி 70 கோல்கள் அடித்துள்ளார். 

2003ம் ஆண்டு கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்ற விஜயன், அதன் பின்னர் 20க்கும் மேற்பட்ட மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கடைசியாக நடிகர் விஜய்யுடன் சேர்ந்து பிகில் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்தநிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் வரும் 17-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. திருச்சூரில் உள்ள அவர் வங்காளத்தை சேர்ந்த 50 பேர் உணவின்றி பசியால் வாடுவதாக அவரது காதிற்கு தகவல் சென்றது. இதனை அறிந்த விஜயன், உடனடியாக அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்தார்.  தினமும் 50 பேருக்கு அவர் உணவுகளை தயார் செய்து அனுப்பி வைப்பதாக கூறப்படுகிறது.

Next Story