ஸ்பெயினில் லாலிகா கிளப் கால்பந்து போட்டி அடுத்த மாதம் மீண்டும் தொடக்கம்


ஸ்பெயினில் லாலிகா கிளப் கால்பந்து போட்டி அடுத்த மாதம் மீண்டும் தொடக்கம்
x
தினத்தந்தி 23 May 2020 11:54 PM GMT (Updated: 23 May 2020 11:54 PM GMT)

ஸ்பெயினில் தடைப்பட்டிருந்த லாலிகா கிளப் கால்பந்து போட்டி அடுத்த மாதம் (ஜூன்) 8-ந்தேதி மீண்டும் தொடங்குகிறது.


*இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர், மராட்டிய மாநிலம் பல்ஹார் மாவட்டத்தில் உள்ள ஒரு மைதானத்தில் நேற்று வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். ஊரடங்கால் 2 மாத ஓய்வுக்கு பிறகு வெளிப்புற பயிற்சியில் ஈடுபட்ட முதல் இந்திய கிரிக்கெட் வீரர் இவர் தான். இந்த பகுதியில் மைதானங்களில் ரசிகர்கள் இன்றி விளையாட்டு நடவடிக்கைகளை தொடங்குவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

*ஸ்பெயினில் தடைப்பட்டிருந்த லாலிகா கிளப் கால்பந்து போட்டி அடுத்த மாதம் (ஜூன்) 8-ந்தேதி மீண்டும் தொடங்குகிறது. இதற்கு அனுமதி அளித்து அந்த நாட்டு பிரதமர் பெட்ரோ சாஞ்சஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

*தமிழ்நாடு கால்பந்து அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் பயிற்சியாளருமான ஆர்.சண்முகம் உடல்நலக்குறைவால் நேற்று அதிகாலை சென்னையில் மரணம் அடைந்தார். 77 வயதான சண்முகம், கொல்கத்தாவில் பிரபலமான மோகன் பகான் கிளப்புக்காகவும் ஆடியுள்ளார். அவருக்கு மனைவியும், 2 மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

*இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடுபவருமான ஜோஸ் பட்லர் அளித்த ஒரு பேட்டியில் ‘இங்கிலாந்து கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு ஐ.பி.எல். உதவிகரமாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. கடந்த சில ஆண்டுகளாக எங்களது நாட்டு வீரர்கள் நிறைய பேர் ஐ.பி.எல்.-ல் இணைந்துள்ளனர். என்னை பொறுத்தவரை உலக கோப்பையை தவிர்த்து ஐ.பி.எல். போட்டி தான் உலகின் சிறந்த தொடர்’ என்றார்.

* உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் 8 தங்கப்பதக்கம் வென்றவரான இந்திய வீராங்கனை மானுபாகெர் அளித்த ஒரு பேட்டியில் ‘பயிற்சி பெறும் இடம் முழுமையான பாதுகாப்பு நிறைந்தது என்று உணரும் நிலை வரும் வரை நான் எந்தவொரு பயிற்சி முகாமுக்கும் செல்லமாட்டேன். எலக்ட்ரானிக் இலக்கு வசதியை எனக்கு இந்திய விளையாட்டு ஆணையம் வழங்கி இருக்கிறது. அதனை வைத்து வீட்டிலேயே பயிற்சி செய்து வருகிறேன். பெரிய போட்டிகள் வராமலோ?, கொரோனா வைரஸ் முழுமையாக ஓயாமலோ? அவசரமாக பயிற்சிக்கு திரும்ப காரணம் எதுவும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை’ என்றார்.

Next Story