கால்பந்து

பார்சிலோனா- செல்டா ஆட்டம் ‘டிரா’ - மெஸ்சி ஏமாற்றம் + "||" + Barcelona - Zelda Match draw - Messi disappointed

பார்சிலோனா- செல்டா ஆட்டம் ‘டிரா’ - மெஸ்சி ஏமாற்றம்

பார்சிலோனா- செல்டா ஆட்டம் ‘டிரா’ - மெஸ்சி ஏமாற்றம்
லா லிகா கிளப் கால்பந்து போட்டியில் பார்சிலோனா- செல்டா இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.
விகோ,

லா லிகா கிளப் கால்பந்து போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை நெருங்கி வரும் இந்த தொடரில் நேற்று முன்தினம் இரவு விகோ நகரில் நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பார்சிலோனா அணி, செல்டா விகோவை எதிர்கொண்டது. பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் (68 சதவீதம்) பார்சிலோனா ஆதிக்கம் செலுத்தினாலும் வெற்றிக்கனியை பறிக்க முடியவில்லை. 20-வது நிமிடத்தில் பார்சிலோனா நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி ‘பிரிகிக்’ வாய்ப்பில் உதைத்த பந்தை சக வீரர் லூயிஸ் சுவாரஸ் தலையால் முட்டி வலைக்குள் தள்ளினார். இதே போல் 67-வது நிமிடத்தில் மெஸ்சி தட்டிக்கொடுத்த பந்தை சுவாரஸ் கோலாக்கினார். இதற்கிடையே 50-வது நிமிடத்தில் செல்டா வீரர் பெடோர் ஸ்மோலோவ் ஒரு கோல் அடித்தார்.


ஆட்டம் முடிய 2 நிமிடம் இருந்த போது செல்டா வீரர் இயகோ அஸ்பாஸ் ‘பிரிகிக்’ வாய்ப்பில் கோல் அடித்து, பார்சிலோனாவுக்கு அதிர்ச்சி அளித்தார். இதனால் இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இரு அணிகளும் தலா ஒரு புள்ளி பெற்றன.

தனது ஒட்டுமொத்த கால்பந்து வாழ்க்கையில் இதுவரை 699 கோல்கள் அடித்துள்ள மெஸ்சி, 700 என்ற இலக்கை அடைய போராடுகிறார். கடந்த 3 ஆட்டங்களில் அவர் ஒரு கோல் கூட போடவில்லை. இது அவருக்கு ஏமாற்றமாக அமைந்தாலும் 250-வது முறையாக கோல் அடிக்க உதவிய வகையில் புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறார்.

இதுவரை 32 ஆட்டங்களில் விளையாடி உள்ள பார்சிலோனா 21 வெற்றி, 6 டிரா, 5 தோல்வி என்று 69 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. முன்னாள் சாம்பியன் ரியல்மாட்ரிட் 31 ஆட்டங்களில் விளையாடி 68 புள்ளிகளுடன் 2-வது இடம் வகிக்கிறது.