லா லிகா கால்பந்து: ரியல்மாட்ரிட்டை நெருங்கியது பார்சிலோனா


லா லிகா கால்பந்து: ரியல்மாட்ரிட்டை நெருங்கியது பார்சிலோனா
x
தினத்தந்தி 9 July 2020 10:15 PM GMT (Updated: 9 July 2020 7:20 PM GMT)

லா லிகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணி புள்ளி பட்டியலில் ரியல்மாட்ரிட்டை வெகுவாக நெருங்கியுள்ளது.

பார்சிலோனா,

ஸ்பெயினில் நடந்து வரும் லா லிகா கால்பந்து போட்டி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பார்சிலோனா அணி, எஸ்பான்யோல் கிளப்பை எதிர்கொண்டது. பெரும்பாலும் பந்து பார்சிலோனா (75 சதவீதம்) கட்டுப்பாட்டில் இருந்தாலும் அவ்வளவு எளிதில் எஸ்பான்யோலின் தடுப்பு அரணை உடைக்க முடியவில்லை.

50-வது நிமிடத்தில் எதிரணி வீரரை ‘பவுல்’ செய்ததால் பார்சிலோனா வீரர் அன்சு பாட்டி சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதே போல் 53-வது நிமிடத்தில் எஸ்பான்யோல் வீரர் லோஜனோவும் சிவப்பு அட்டை நடவடிக்கைக்கு உள்ளானார். இதனால் எஞ்சிய நேரம் இரு அணிகளும் தலா 10 வீரர்களுடன் விளையாடியது. இந்த சூழலில் 56-வது நிமிடத்தில் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் லூயிஸ் சுவாரஸ் கோல் அடித்து அசத்தினார்.

பார்சிலோனா அணிக்காக சுவாரஸ் அடித்த 195-வது கோல் இதுவாகும். இதன் மூலம் அந்த அணிக்காக அதிக கோல்கள் அடித்தவர்களின் பட்டியலில் முன்னாள் வீரர் லாஸ்லோ குபாலாவை பின்னுக்கு தள்ளி சுவாரஸ் 3-வது இடத்துக்கு முன்னேறினார். இந்த வகையில் முதல் இரு இடங்களை மெஸ்சி (630 கோல்), சீசர் (232 கோல்) ஆகியோர் ஆக்கிரமித்துள்ளனர்.

சுவாரசுக்கு பிறகு யாரும் கோல் போடாததால் முடிவில் பார்சிலோனா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றியை ருசித்தது. 35-வது ஆட்டத்தில் விளையாடிய பார்சிலோனா 23 வெற்றி, 7 டிரா, 5 தோல்வி என்று 76 புள்ளிகளை பெற்று, முதலிடம் வகிக்கும் ரியல்மாட்ரிட்டை (34 ஆட்டத்தில் 77 புள்ளி) நெருங்கியுள்ளது.

ஸ்பெயினில் கவுரமிக்க கிளப்புகளில் ஒன்றாக கருதப்படும் எஸ்பான்யோல் 35 ஆட்டங்களில் ஆடி 24 புள்ளிகளுடன் 20-வது இடத்தில் அதாவது கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது. இதன் மூலம் அந்த அணி 1994-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக தரம் இறக்கப்பட்டுள்ளது. இனி உள்ளூரில் 2-ம் டிவிசன் லீக்கான செகுந்தா டிவிசன் லீக் போட்டியில் விளையாடி அதில் டாப்-2 இடத்திற்குள் வந்தால் மட்டுமே எஸ்பான்யோல் அணியால் லா லிகா போட்டிக்கு தகுதி பெற முடியும்.

பார்சிலோனா வீரர் லூயிஸ் சுவாரஸ் கூறுகையில், ‘எஸ்பான்யோல் அணி நெருக்கடியான கட்டத்தில் இருந்ததால் கடும் சவால் அளிப்பார்கள், அதனால் இந்த ஆட்டம் கடினமாக இருக்கும் என்பது தெரியும். சாம்பியன் வாய்ப்பில் நீடிக்க நாங்கள் எஞ்சிய 3 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டியது முக்கியம். அதே சமயம் ரியல்மாட்ரிட் அணி தவறிழைத்து சரிவை சந்திக்கும் என்று நம்புகிறோம்.’

Next Story