லா லிகா கால்பந்து: சாம்பியன் பட்டத்தை நெருங்கியது, ரியல் மாட்ரிட்


லா லிகா கால்பந்து: சாம்பியன் பட்டத்தை நெருங்கியது, ரியல் மாட்ரிட்
x
தினத்தந்தி 12 July 2020 12:50 AM GMT (Updated: 12 July 2020 12:50 AM GMT)

லா லிகா கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் அணி சாம்பியன் பட்டத்தை நெருங்கியது.

மாட்ரிட்,

ஸ்பெயினில் நடந்து வரும் 20 அணிகள் இடையிலான லா லிகா கால்பந்து போட்டி தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன் ரியல் மாட்ரிட், அலாவ்ஸ் அணியை எதிர்கொண்டது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் அதிக நேரம் (71 சதவீதம்) வைத்து இருந்த ரியல் மாட்ரிட் அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. 11-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் வீரர் பெர்லான்ட் மென்டியை, எதிரணி வீரர் ஜிமோ நவரோ ‘பவுல்’ செய்தார். இதனால் ரியல் மாட்ரிட் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதனை பயன்படுத்தி அந்த அணியின் நட்சத்திர வீரர் கரிம் பென்ஜிமா அபாரமாக கோல் அடித்தார். இடைநீக்கம் செய்யப்பட்டதால் வெளியேற்றப்பட்ட கேப்டன் செர்ஜியோ ரமோஸ்க்கு பதிலாக கேப்டன் பொறுப்பை வகித்த கரிம் பென்ஜிமா இந்த சீசனில் அடித்த 18-வது கோல் இதுவாகும்.

51-வது நிமிடத்தில் பென்ஜிமா தட்டிக் கொடுத்த பந்தை சக வீரர் மார்கோ அசென்சியோ கோலாக மாற்றினார். பதில் கோல் திருப்ப அலாவ்ஸ் அணி எடுத்த முயற்சிக்கு கடைசி வரை பலன் கிடைக்கவில்லை. முடிவில் ரியல் மாட்ரிட் 2-0 என்ற கோல் கணக்கில் அலாவ்ஸ் அணியை வீழ்த்தியது. கொரோனா இடைவெளிக்கு பிறகு ரியல் மாட்ரிட் தொடர்ச்சியாக சுவைத்த 8-வது வெற்றி இதுவாகும்.

இந்த வெற்றியின் மூலம் ரியல் மாட்ரிட் அணி சாம்பியன் பட்டத்தை நெருங்கி விட்டது. அந்த அணி 35 ஆட்டத்தில் ஆடி 24 வெற்றி, 8 டிரா, 3 தோல்வியுடன் 80 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் நீடிக்கிறது. நடப்பு சாம்பியன் பார்சிலோனா அணி 35 ஆட்டத்தில் விளையாடி 76 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. இன்னும் 3 லீக் ஆட்டங்கள் எஞ்சி இருக்கும் நிலையில் ரியல் மாட்ரிட் அணி தனது அடுத்த ஆட்டத்தில் வருகிற 14-ந் தேதி கிரானடா அணியை சந்திக்கிறது. இந்த ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணி வெற்றி பெற்று, பார்சிலோனா அணி தனது எஞ்சிய 3 ஆட்டங்களில் ஏதாவது ஒன்றில் வெற்றி பெறாமல் போனால் கூட ரியல் மாட்ரிட் அணி மகுடத்தை தனதாக்கி விடும். தற்போதைய நிலையில் இந்த போட்டியில் ரியல் மாட்ரிட் சாம்பியன் பட்டத்தை உச்சிமுகர்வது ஏறக்குறைய உறுதியாகி விட்டது என்றால் மிகையாகாது.

Next Story